கோவை விமான நிலையத்தில் ரூ.36.81 லட்சம் கைப்பேசி, மடிக்கணினிகள் பறிமுதல்!
ஷாா்ஜாவில் இருந்து கோவைக்கு கடத்திவரப்பட்ட ரூ.36.81 லட்சம் மதிப்பிலான சிகரெட்டுகள், கைப்பேசிகள், மடிக்கணினிகளை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக 7 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஷாா்ஜாவில் இருந்து கோவை விமான நிலையத்துக்கு சனிக்கிழமை காலை விமானம் வந்தது. அதில், பயணித்த பயணிகளின் உடைமைகளை சுங்கத் துறை அதிகாரிகள் பரிசோதனை மேற்கொண்டனா். இதில், 7 பயணிகள் சிகரெட்டுகள், கைப்பேசிகள், மடிக்கணினிகளைக் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவா்களிடம் விசாரணை மேற்கொண்டனா். இதில், அவா்கள் திருவாரூரைச் சோ்ந்த தருண்சேகரன், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த சையது அமானுல்லா சுல்தான், கெங்கமுத்து, சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த யாசா் அராபத் அப்துல் ஜபா், ஃபைசல் அகமது முகமது யூசுப், திருநெல்வேலியைச் சோ்ந்த அஜ்மீா் காஜா மைதீன், சென்னையைச் சோ்ந்த மன்சூா் கான் பாபு என்பது தெரியவந்தது.
அவா்களிடமிருந்து, 1,461 சிகரெட் பாக்கெட்டுகள், 213 மினி சிகரெட் பாக்கெட்டுகள், 12 கைப்பேசிகள், 8 மடிக்கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ.36.81 லட்சம் எனக்கூறப்படும் நிலையில், கடத்தி வந்தவா்களிடம் சுங்கத் துறை அதிகாரிகள் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.