தில்லி முதல் பேரவைக் கூட்டத்தில் சிஏஜி அறிக்கை: அதிகாரிகள் தகவல்
சங்க இலக்கியம் முதல் சோஷியல் மீடியா வரை... காலமெல்லாம் காதல்! | My Vikatan
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தில்
முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி"
தமிழ் குடி மட்டும் தோன்றவில்லை. தமிழோடு சேர்ந்து காதலும் தோன்றிவிட்டது. "காதல்" என்ற சொல் மொழி, இனம், மதம் என எந்த வித்தியாசமும் இன்றி கண்டம் விட்டு கண்டம் பாயும் சக்தி கொண்டது. அப்படியான காதலின் சிறப்பு பற்றி உலக இலக்கியங்கள் பல பேசியுள்ளன.

தொல்காப்பியத்தில் காதல்
தமிழில் நமக்கு கிடைத்த மிகப்பழமையான இலக்கண நூலான தொல்காப்பியத்தில் காதலை 3 வகைகளாக தொல்காப்பியர் பிரித்துள்ளார். அதில் கைக்கிளை என்பது ஒரு தலைக் காதலாகும். அன்பின் ஐந்திணையானது குறிஞ்சியில் புணர்தலும், முல்லையில் இருத்தலும், பாலையில் பிரிதலும், மருதத்தில் ஊடலும், நெய்தலில் இரங்கலும் ஆகியனவாகும். பெருந்திணை என்பது ஒருவனும் ஒருத்தியும் ஒருவருக்கொருவர் அன்பின்றிக் கூடி வாழும் முறையாகும். இதைப் பொருந்தாக் காமம் என்றும் கூறுவர்.
"எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது
தானமர்ந்து வரூஉம் மேவற்றாகும்”
(தொல்.1164)
மனித குலத்தின் இயற்கை இயல்பான இன்ப நுகர்வான காதல், அனைத்துக்குமான பிணைப்பு நிலை ஆகும். அது இயற்கையோடு பொருந்திய ஒழுக்க நிலையையும் மானுட உடலுயிரினின்று பிரித்து அறிய முடியாததாகவும் திகழும். அத்தகு காதலைப் பழந்தமிழகம் போற்றியது என்கிறார்.
சங்க இலக்கியங்கள்
தமிழ் இலக்கியங்களில் அகத்திணை, புறத்திணை என 2 உண்டு. இதில் 'திணை' என்பது ஒழுக்கமாகும். அகத்திணையில் எழுதப்பட்ட பாடல்கள் மனம் ஒன்றுபட்ட தலைவனும் தலைவியும் ஒன்றுகூடி தாம் அனுபவித்த இன்பம் இப்படிப்பட்டது என்று பிறருக்குச் சொல்ல முடியாததாய் அகத்தினுள் அனுபவிக்கும் உணர்ச்சியாகும். இப்பாடல்களில் தமிழ் புலவர்கள் எண்ணற்ற உவமைகளை கையாண்டுள்ளனர்.
"யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறை கேளீர்
யானும் நீயும் எவ்வழி யறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே”
(குறுந்தொகை 40)
இந்த குறுந்தொகை பாடலானது என்னுடைய தாயும் உன்னுடைய தாயும் யார் யாரோ? என் தந்தையும் உன் தந்தையும் எந்த முறையில் உறவினர்? நானும் நீயும் எவ்வாறு முன்பு அறிந்தோம்? செம்மண் நிலத்தில் பெய்த மழைநீர் போல அன்புடைய நம் நெஞ்சம் தாமாக ஒன்றுபட்டனவே என்று தலைவன் தலைவியிடம் காதலை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

மான்களின் காதல்
"சுனைவாய்ச் சிறுநீரை யெய்தாதென் றெண்ணிப்
பிணைமா னினிதுண்ண வேண்டிக் - கலைமாத்தன்
கள்ளத்தி னூச்சுஞ் சுரமென்பர் காதல
ருள்ளம் படர்ந்த நெறி"
( ஐந்திணை ஐம்பது:38)
ஐந்திணை ஐம்பது என்ற நூலில் மாறன் பொறையானார் தன் பாடலில் பாலை நிலத்தில் காதல் மிகுந்த ஆண் மானும், பெண் மானும் ஓடிக்களைத்து தாகம் தீர்க்க நீர்வேண்டி, அங்குமிங்கும் அலைகின்றன. ஒரு சுனையில் ஒரு மான் அருந்துவதற்கு மட்டுமே சிறிதளவு நீர் உள்ளது. இந்நிலையில், பெண் மான் நீர் அருந்தட்டும் என்று ஆண் மான், தான் நீரைப்பருகுவது போல் பாவனை செய்தது. அதே போல் பெண் மானும் நீரைப் பருகாமல் ஆண் மான் அருந்தட்டும் என்று நீர் அருந்துவது போல் பாவனை செய்தது. சுனையின் நீர் தீரவே இல்லை. தங்கள் காதலினை அந்த இரு மான்களும் வெளிப்படுத்தியதை கூறி மனிதர்களுக்கு காதல் வாழ்விலும், இல்லற வாழ்விலும் விட்டுக்கொடுத்து வாழ்வது பற்றி எடுத்துரைக்கிறார்.
திருவள்ளுவரின் கற்பனைகள்
உலகப் பொதுமறை நூலான திருக்குறளில் காமத்து பால் என்னும் அதிகாரத்தில் திருவள்ளுவர் காதல் குறித்து பல குறட்பாட்களை எழுதியுள்ளார். அதில் காதல் வயப்பட்ட தலைவியின் மனநிலையை இவ்வாறு வெளிப்படுத்துகிறார்.
"கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து"
நான் கண்ணுக்கு மை தீட்டமாட்டேன் என்று தலைவி கூறியதும் ஏன் என்று தோழி கேட்க, என் காதலர் எப்போதும் என் கண்ணுக்கு உள்ளேயே இருக்கிறார். நான் மை தீட்டிக் கொண்டால் கண்ணில் இருக்கும் அவருக்கு உறுத்தும் அல்லவா? அதனால் தான் மை தீட்டமாட்டேன் என்று பதிலுரைக்கிறாள்.

பாரதியின் கண்ணம்மா
சுதந்திர போராட்ட காலத்தில் வீரமிக்க பாடல்களை தந்து சமூக சீர்திருத்தவாதியாக திகழ்ந்தவர் பாரதியார். அவர் எழுதிய கண்ணன் பாட்டு என்ற நூலின் ஒரு பகுதியானது கண்ணாம்மா என் காதலி. இதில் அவர் தன் காதல் உணர்வை வெளிப்படுத்துகிறார்.
'சுட்டும்விழிச் சுடர்தான் - கண்ணம்மா!
சூரிய சந்திரரோ
வட்டக் கரியவிழி - கண்ணம்மா!
வானக் கருமைகொல்லோ"
என்று கண்ணம்மா மீதான விழியீர்ப்புப் பார்வையை கூறியுள்ளார்.
ஹைக்கூ கவிதைகள்
இது போல் தமிழில் பல இலக்கியங்களில், காப்பியங்களில் காதல் குறித்து பலவித உவமைகளுடன் நிறைய பாடல்கள் உள்ளன. தமிழ் எழுத்தாளர்களும் கவிதைகள், சிறுகதைகள், நாவல்களில் காதலை மையப்படுத்தி எண்ணற்ற படைப்புகளை தந்துள்ளனர். கற்காலத்திலிருந்தே மனிதனால் கையாளப்பட்டு வரும் காதலானது காலத்திற்கு ஏற்றவாறு மாற்றங்களுடன் இன்றும் மனித மரபணுக்களில் ஆழமாய் தடம் பதித்து தொடர்கிறது. இன்று இணைய செயலிகளில் காதல் குறித்து எழுதப்படும் ஏராளமான ஹைக்கூ கவிதைகள் உலா வருகிறது. இவையெல்லாம் கூற வருவது, காதல் என்றைக்கும் அழியாத அழகிய உணர்வு என்பதைதான்.
ஆதலால் காதல் செய்வீர்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...