செய்திகள் :

விடை தேடிய பூ - சிறுகதை | My Vikatan

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

ஓங்கி உயர்ந்து நின்ற காழ்வை மரத்தின் அடியில் உட்கார்ந்து, அதன் முதுகில் தன் முதுகைச் சாய்த்துத் தன் மனக்கவலையைத் தனக்குள் பேசிக் கொண்டு இருந்தாள் பூங்குவளை.

மரத்தின் தண்டில் பிதுங்கி நின்ற பிசினை கையில் எடுத்து முகர்ந்தவள் முகம் மலர்ந்து சிரித்தது. மரநிழலில் தன் மனதில் நினைத்த ஓவியங்களைக் கண்டு ரசித்தவளையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தது ஒரு கிளிக் கூட்டம்.

"ஐய்யையோ! நம்மைக் காதலிச்ச அத்தானைத் தேடுவதை மறந்து இதை ரசிக்க ஆரம்பிச்சிட்டோமே!" என்று தன் தலையில் தானே ஓங்கி ஒரு குட்டு வைத்துக் கொண்டாள் அவள்.

நான்கு கிளிகளும் பூங்குவளைக்கு எதிரே இருந்த தேக்கு மர இலைகளுக்குள் நின்று அவளின் புலம்பலைக் கூர்ந்து கவனித்தன. அவள் குரலைக் கேட்க விடாமல் அங்கு வந்த செம்போத்துப் பறவை கூவ ஆரம்பித்தது.

கிளிகளின் குரலைக் கேட்டு அண்ணாந்து பார்த்த பூங்குவளையின் கண்களில் தட்டுப்பட்டது செம்போத்து. தனது இணையைத் தேடி 'கூப்... கூப்…' என தன்னுடல் அதிர முரட்டுத் தனமாகக் குரல் எழுப்ப வேறு திசையில் இருந்து அதே ராகத்தில் 'கூப்... கூப்...' என்றிசைத்தது அதன் இணை.

அக்காதலின் இசையில் அவள் மனம் சோர்ந்து மயங்கியது. எங்கே போனாலும் இந்தக் காதல் தொல்லை தன்னை விட்டுப் போகாதோ என்று மனம் தவித்தது. தன் காலில் கிடக்கும் செருப்பை எடுத்துத் தன் தலையில் தானே ஓங்கி அடிக்கப் பூங்குவளையின் கைகள் பரபரத்தது.

கொஞ்ச நேரம் முன்பாகத் தன்னிடம் கோபமாகப் பேசிய தங்கை தம்பிகளை 'பளார் பளாரென' அறைய நினைத்து முடியாததால் அவள் மனம் மட்டும் துடித்துப் புலம்பியது. இரவு நடந்ததை நினைவில் சுமந்து திரிந்தாள் பூங்குவளை.

"எக்கா.., உனக்கு ஈவு இரக்கமே இல்லையா? அத்தானைப் போய் ஒருமுறையாவது பார்த்தாயா? அவர் எவ்வளவு ஏங்கியே உன்னைத் தேடினார் தெரியுமா?" என்று கத்தினாள் பூங்குவளையின் கடைக்குட்டித் தங்கை மங்கை.

"உன்னைப் போன்ற கொடூர மனசு படைச்ச அரக்கியை நாங்க பார்த்ததே இல்லை" எனக் கடைசித் தம்பி அக்காவை மனம் போன போக்கில் எல்லாம் பேசினான்.

சித்தரிப்புப் படம்

ஒரு மணிநேரம் கத்தி ஓய்ந்த உடன் பிறப்புகள், வீட்டில் இருந்ததை எடுத்துச் சாப்பிட்டு விட்டுக் கிளம்பி விட்டனர். கிளம்பும் போது பெரிய தங்கை அங்கையர்கண்ணி பெரிய சாபத்தை அள்ளி வீசிவிட்டுப் போய்விட்டாள்.

"இந்தப் பாவம் உன்னைச் சும்மா விடாது அக்கா!"

"எந்தப் பாவம் செய்தேன் நான்? எனக்கு ஒன்றுமே புரியலையே!" என்று அகலாத யோசனையில் தன் உள்ளங் கைகளுக்குள் முகத்தைப் புதைத்த பூங்குவளை, இரவெல்லாம் தூங்காத களைப்பில் அகில் மணம் மனதை நிறைக்க அம்மரத்தின் அடியிலேயே படுத்துத் தூங்க ஆரம்பித்தாள்.

பகல் கனவு தூக்கத்திற்குள் நுழைந்து அவள் மனதைத் தட்டி எழுப்பியது. "குவளை கனவிற்குள் நுழைந்து உன் காதல் அத்தானைக் கண்டுபிடி" என்று உத்தரவு போட்டது. கனவுக் குரலுக்குக் கட்டுப்பட்டுத் தனது பள்ளிப் பருவத்திற்குள் கனவுக்குள்ளே ஓடத் தொடங்கினாள் குவளை.

சின்ன வயதில் உறவுகள் எல்லோரும் அடித்துப் பிடித்து விளையாடியது கனவுக்குள் விரிந்தது. இதில் உடன் பிறப்புகள் சொன்ன அத்தானை யோசித்து யோசித்துத் தேடி மூளையைக் கசக்கிப் பிழிந்தாலும் தன் மனசுக்குள் எந்த இடத்திலும் அவனைக் காணவில்லையே என்று அதைக் கடந்து வந்தாள்.

நமக்கு நான்கு அத்தைகள். இதில் எந்த அத்தையின் மகன் நம்மைக் காதலித்துத் தொலைத்தான்! அதைக் கேட்காமல் போனோமே! என்று மேலும் யோசித்ததில் தலை வலிக்கத் தொடங்கியது.

கூடப்பிறந்த குரங்குகளிடம் யார் அந்த அத்தான்? என்று கேட்டால் அதற்கும் ஆயிரம் கதை சொல்லுங்க. நம்ம தலை போற வரைக்கும் இந்தத் தலைவலியும் போகாது என்று புலம்பிய குவளை தன் நெற்றியில் பொட்டுக் குழி படக் படக்கென இடிக்க வலி தாங்காமல் தன் தலையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள்.

இந்த சனியன் பிடித்த காதல் எங்கே ஒளிந்து கிடந்தது. முதலில் காதல் என்றால் என்ன என்று கண்டு பிடிப்போம். காதலுக்கான வாய்ப்பாடு தெரிஞ்சிருச்சினா அந்தக் காதல் அத்தானைக் கண்டு பிடிச்சிடலாமென தன் நெஞ்சுக்குள் போய்த் துழாவத் தொடங்கினாள் பூங்குவளை. 

காதல் எப்படி இருக்கும் என்று அறியும் ஆவலில் கனவிலேயே தான் படித்த பள்ளிக் கூடத்திற்குள் ஓடினாள்.

இங்கே தன் தோழி கலாவைச் சந்தித்துக் காதலுக்கு வரைபடம் கேட்போம் என்று நினைத்த பூங்குவளை, பத்தாம் வகுப்பில் தான் அமர்ந்த பெஞ்சில் உட்கார்ந்து கலா வருகிறாளா என்று வகுப்பறையின் வாசலையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.

"ஹாய் பிரண்ட்ஸ், குட்மார்னிங்!" என்று தன் கலகலப்பான குரலுடன் உள்ளே நுழைந்த கலா, புத்தகங்களை அவள் இடத்தில் வைத்து விட்டு பூங்குவளையின் கவலையான முகத்தைப் பார்த்து வியந்தாள்.

"இஸ் எவ்ரிதிங் ஓகே, டியர்?"

"காதலுக்கு உரை சொல்லு!" என்ற பூங்குவளையின் கேள்வியில் வகுப்பறையே அவளைச் சூழ்ந்தது.

"டூ யூ ஹேவ் எ கிரெஷ் ஆன் எனி ஒன் டியர்?"

"எருமை மாடே தமிழில் பேசித் தொலை? இங்கிலீஷ் காரன் பெத்த பிள்ளை மாதிரி உளராதே!"

"எவனையும் பார்த்து எனக்கு ஆசை வரலை. ஏதோ ஒரு அத்தை மகன் என்னைக் காதலிக்கிறானாம்" என்று சொல்லிய குவளை வாயை மூடும் முன்பே அவள் வகுப்புத் தோழிகள் ஆர்ப்பரித்தனர்.

"அவன் காதலிப்பது உனக்கு எப்படித் தெரியும் குவளை?"

"எவன் அவன்கிறதே எனக்குத் தெரியலைனு புலம்புறேன். எவனோ ஒரு அத்தானாம்."

"கேன் யூ லிஸ்ட் யுவர் அத்தான்ஸ்' நேம்ஸ்?"

"அடப் போங்கடி! பெயரை வச்சிக் காதலைக் கண்டு பிடிக்க நாம என்ன மந்திரவாதியா?"

"காதல் எப்படி இருக்கும்னு நான் இப்போ அவசியம் தெரிஞ்சுக்கணும்."

"எதுக்கு?"

"நான் எப்பயாவது எந்த அத்தானையாவது காதலிச்சு இருக்கேனான்னு தெரிஞ்சுக்கிறதுக்காகக் கேட்கிறேன்."

"சே.. இதுக்குத் தானா இந்த ஆர்ப்பாட்டம்? நீ யாரையோ காதலிப்பதாக நெனச்சி வந்துட்டோம்" என்று வேறு பேசத் தொடங்கினர் தோழிகள். கலாவைக் கவலையோடு பார்த்தாள் குவளை.

"வான்ட் டு கோ அவுட் குவளை!" என்ற கலாவைப் பார்த்து முகத்தைத் திருப்பிக் கொண்டாள் குவளை.

"சரி.. சரி.. இனிமேல் ஒரு வார்த்தை இங்கிலீஷ் பேச மாட்டேன். வா போகலாம்."

விளையாட்டுத் திடலில் இருந்த வேப்ப மரத்தடிக்குச் சென்று உட்கார்ந்த தோழிகள் தாங்கள் பேச வந்ததை மறந்து சிறுசிறு கற்களாக எடுத்து மரத்தின் மேல் இருந்த காக்கைகளை விரட்ட ஆரம்பித்தனர். 

கலா தன் கையில் வைத்திருந்த நிலக்கடலைப் பருப்புகளை விட்டெரிய ஒவ்வொரு காகமாக வந்து அதைப் பிடித்துக் கீழே போடாமல் தின்ன ஆரம்பித்தது. எத்தனை காக்கைகள் இருக்கிறது என்று எண்ண ஆரம்பித்தத் தோழிகள் காதலை மறந்தே போயினர்.

"ஐயோ கடவுளே! அத்தானின் காதலை மறந்துட்டேனே! யாருடி அந்த நாசமத்துப் போற அத்தான்? காதலைப் பத்திச் சொல்லு கலா? நீ காதலிச்சிருக்கியா?" என்று தோழியை உலுக்கினாள் குவளை.

"என்னை சுரேஷ் காதலிக்கிறான் குவளை!" விளையாடிக் கொண்டே கலா சொன்னதைக் கேட்டு நடுநடுங்கிப் போனாள் குவளை. அவளுக்கு வியர்த்து ஊற்றியது. உடம்பு தூக்கி வாரிப் போட அவள் மனசு பதறியது.

"என்னடி சொல்றே?"

"சுரேஷ் லவ்ஸ் மீ."

"நீ."

"வீ போத் லவ் ஈச் அதர்."

"தப்புடி இவளே. இங்கிலீஷ்ல பேச நினைச்சி மோசம் போயிட்ட கலா. இங்கிலீஷ் காரனோட கெட்ட பழக்கம் உனக்கும் வந்திருச்சு" என்று தோழியைத் திட்ட ஆரம்பித்தாள் பூங்குவளை. அவளைப் பார்த்து அடக்க மாட்டாமல் சிரித்தாள் கலா.

"சரி உன் காதலை விடு, என் காதலுக்கு வா கலா. இந்த லவ் வரும் போது நமக்கு என்ன தோணும்? என்னென்ன செய்வோம்? எப்படி இருப்போம்? நம்ம மூளை எங்கு இருக்கும்? மனசு எங்க இருக்கும்? காதலிச்சது எப்பவும் மறக்குமா? மறக்காதா? காதலிச்சவங்களைக் கல்யாணம் பண்ணலைனா நம்ம மனசுக்கும் உடம்புக்கும் என்ன நடக்கும்? அது ரெண்டும் சண்டை போடுமா?"

"ஓகே.., ஓகே.., ஸ்டாப் டியர்! ஒன்னு ஒன்னா வரிசையாக் கேளு குவளை! கேக்குற எனக்கே தலை சுத்துது!"

"சரி கலா! மொத்தத்தில் காதல் எப்படி இருக்கும்? நமக்கு என்ன செய்யும்?"

"ஏய் நிறுத்துடி. ஹானஸ்டிலி நோ ஒன் வில் எவர் லவ் யூ!" என்ற கலா கோபத்தில் கைகளில் இருந்த மணலைத் தட்டியபடி வகுப்பறைக்குக் கிளம்பி விட்டாள்.

"கலா நில்லு நில்லு" என்று கத்திக் கொண்டே அவளைத் தொடர்ந்தாள் குவளை.

"குவளை.., குவளை.., என்ன ஆச்சு? பகலிலேயே கனவா? எந்திரிச்சிச் சோத்தைப் போடு" என்று அவளைத் தட்டி எழுப்பினான் பூங்குவளையின் கணவன் ராம். எழுந்து திருதிருவென விழித்துக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்தாள் குவளை.

"ஆமா கலாவை எதுக்குக் கூப்பிட்டுக் கத்தி அழுதியாம்?"

"என்னை எந்த அத்தானோ காதலிச்சானாம். அவனை நான் பார்க்கலைனு என் கூடப் பிறந்ததுங்க வந்து என்னை வஞ்சிட்டுப் போகுதுங்க" என்று சொல்லிக் கொண்டே சோத்து வட்டிலைக் கணவன் முன் வைத்தாள்.

"உன் கூடப் பொறந்ததுங்க உன்னை மாதிரி தானே இருப்பாங்க; நான் இருக்கையில் சொல்லிருந்தா கொன்னே போட்டிருப்பேன்" என்று மேலும் கோபமாகக் கத்தியபடி அவளை அடிக்கக் கையை ஓங்கினான் ராம்.

"அடிக்காதீங்க! நான் எந்தத் தப்பும் செய்யலீங்க! எந்த அத்தானைச் சொல்றாங்கன்னே எனக்குத் தெரியாது! மன்னிச்சி விட்டுறுங்க!"

"அடச்சே! காதல்னா என்னனு தெரியாத உன்னை என் தலையில் கட்டிட்டாங்களே! அதுக்குத் தான் அடிக்க வந்தேன்!"

"அதுக்கெல்லாம் அடிப்பாங்களா?"

"கல்யாணத்துக்கு ரெண்டு நாள் முன்னாடி உன் மேல இருக்கிற காதலில் யாருக்கும் தெரியாம உன் கையை நான் பிடிக்க, நீ அழுது ஊரைக் கூட்டினது உனக்கு மறந்து போச்சா குவளை?" என்ற ராமின் பேச்சில் குவளை முகம் சிவக்கத் தலை குனிந்தாள்.

"அழுததைக் கூட ஏத்துக்கலாம். அழுததுக்கு நீ காரணம் சொன்னதும் நம்ம கல்யாணத்தையே நிறுத்தச் சொன்னேன். என்னைப் பெத்தவங்க கேக்கலை."

"அப்ப சொன்னதை இப்பத் திரும்பச் சொல்லு."

"கையைப் பிடிச்சா பிள்ளை பெறந்துடும்னு நெனைச்சேன்" என்று மெல்லிய குரலில் சொன்னாள் குவளை.

"இந்தக் கூமுட்டையை ஒருத்தன் காதலிச்சிருக்கானே அவனை நேராகப் போய்ப் பார்த்துட்டு வரணும்."

"யாரு அந்த அத்தான்னு தெரியாமத் தான் நானும் முழிச்சுக்கிட்டு கிடக்கேன்."

"அதை வந்த உன் கூடப்பிறந்த மண்ணுங்க கிட்ட கேக்க வேண்டியது தான. இந்தா ஃபோனைப் போட்டுக் கேளு. ஒரு எட்டுப் போயி அவனைக் கொலை பண்ணிட்டு வாரேன்."

"யாரை எதுக்குக் கொலை பண்ணனும் மாமா?" என்று கேட்டுக் கொண்டே உள்ளே வந்தாள் அங்கை.

"உங்க சாவாரிச் செத்த அத்தான் இந்த ஏழரையைக் காதலிச்சது காதலிச்சான், இப்பச் சொல்றதை அப்பவே சொல்லித் தொலைச்சிருந்தா நான் தப்பிச்சிருப்பேனே அங்கை."

"நீங்க எதுக்குக் கொல்லனும் மாமா. போன வாரம் செத்துப் போன அத்தானைத் திரும்ப எப்படிக் கொல்ல முடியும்" என்று சிரித்தாள் அங்கை.

"சாவுக்கு ரெண்டு நாள் இருக்கையில் இருந்து சாகும் வரைக்கும் வரவங்க போறவங்க கிட்ட எல்லாம் குவளை அக்காவைப் பத்தி மட்டும் தான் அத்தான் பேசியிருக்காங்க." 

"அட கிறுக்குப் பயலே! என்னை மோசம் பண்ணிட்டானே!" என்று அங்கையுடன் சேர்ந்து சிரித்தான் ராம்.

"காதலிச்சதை எப்படிச் சொல்லியும் என் காதலைப் பூங்குவளை புரிஞ்சுக்கவே இல்லை. இப்போ ரெண்டு நாளா எங்கூட உக்காந்து பேசிக்கிட்டே இருக்கான்னு கிருஷ்ணன் அத்தான் மாய்ஞ்சி மாய்ஞ்சி பேசியிருக்காங்க!"

"காதல்னா என்னனு தெரியாத இவளைப் போயி கிருஷ்ணன் அத்தான் காதலிச்சிருக்காங்க மாமா" என்று தன் தலையில் அடித்துச் சிரித்தாள் அங்கை.

உறவுகளின் கேலிப் பேச்சில் மனம் குன்றிப் போயிருந்த பூங்குவளை ஃபோனில் கலாவின் அழைப்பு வர எதுவுமே பேசாமல் தோழியிடம் அழ ஆரம்பித்தாள். பத்து நிமிடத்தில் கலா ஓடி வந்தாள்.

கலா சுரேஷுடன் உள்ளே வரவும் ராமும் அங்கையும் அவர்களைத் தொந்தரவு செய்யாமல் விலகினர்.

"வாட் ஹாப்பண்ட் டியர்? வொய் ஆர் யூ வீப்பிங்? காலையில் என் கனவிலும் வந்து அழுதுக்கிட்டே இருந்தாய்! அதான் பார்த்துட்டுப் போவோம்னு ஓடி வந்துட்டேன் குவளை!" என்ற தோழியின் மடியில் சாய்ந்தாள் குவளை. 

கலைந்து கிடந்த குவளையின் நரைத்த கூந்தலை ஒதுக்கிய கலா தோழியைத் தூக்கி உட்கார வைத்தாள்.

"செத்துப் போன கிருஷ்ணன் அத்தான் என்னைக் காதலித்ததாகச் சொல்லிட்டுப் போயிட்டார் கலா. எனக்கு அதை ஏத்துக்கவே முடியலை."

"அவர் சொன்னதுக்கு நீ ஏன் அழற குவளை."

"உண்மையாகவே என்னைக் கிருஷ்ணன்‌ அத்தான் காதலிச்சிருந்தா அதை முதலில் என்கிட்ட மட்டும் தானே சொல்லணும் கலா."

"காதலைச் சொல்லத் தெரியாத கோழையை நினைச்சா இவ்வளவு அழறே?"

"இல்லை கலா. இன்னொருத்தன் மனைவி கூட மனசுக்குள்ள எழுபது வயசு வரைக்கும் குடும்பம் நடத்திருக்கியேன்னு அவனைப் பீத்தச் செருப்பால அடிக்க முடியலையேன்னு அழறேன். காறி அவன் மூஞ்சியில் துப்பிட்டு வந்திருப்பேன். அதுக்கும் அவன் உயிரோட இல்லையேன்னு அழறேன்!"

"டோன்ட் திங்க் அபௌட் இட் டியர்."

"எப்படி நினைக்காமல் இருக்க முடியும் சொல்லு? எழுபது வயசு வரை ஒருத்தன் உன்னையே நெஞ்சிக்குள்ள வச்சு வெந்து வெந்து செத்து இருக்கான். அவன் மேல உனக்கு மரியாதை இல்லையா? அன்பு இல்லையா? நீ எல்லாம் ஒரு மனுஷியான்னு என்னமோ உலகத்துல இல்லாத காதலை அவன் செஞ்ச மாதிரி அவனுக்கு வாழ்த்துப் பாடுறாங்க."

"விட்டுத் தள்ளு! ‌மூவ் ஆன் டியர்."

"முடியலை கலா. இந்தக் காதல் சமாச்சாரத்தைக் கேட்டதில் இருந்து நரகலை மிதிச்சிட்டு அந்த அசிங்கத்தோட வீட்டுக்குள்ள நடக்குற மாதிரியே இருக்குது" என்று மேலும் அழ ஆரம்பித்தாள் குவளை.

"ஏய்! இதுக்குப் போயி அழுவியா? ராத்திரியும் சாப்பிடலை. இப்பவும் சாப்பிடாமல் இருந்தால் உடம்பு என்னதுக்கு ஆகும். சும்மா தேவையில்லாமல் அழுதுக்கிட்டு கெடக்குற!" என்று வட்டிலில் சோறு போட்டு எடுத்து வந்த ராம் அவள் வாயில் ஒரு கவளத்தை உருட்டித் திணித்தான்.

அங்கே அழகான காதல் கவி பாடியது. இவளுக்கா காதலுக்கு விடை தெரியாதென நினைத்த தென்றல் பூங்குவளை ராமைத் தழுவியே அவர்களின் காதலை ரசித்தது.

ஆசையாகக் கணவன் ஊட்டிய சோத்து உருண்டையைக் கண்ணீரோடு விழுங்கிய பூங்குவளை பூமாலையாக ராமின் கரங்களில் சரிந்தாள். 

"என்னைத் தவிக்க விட்டுட்டுப் போயிடாத பூங்குவளை. நீ இல்லாமல் நான் இருக்க மாட்டேன்" என்று ஆசை மனைவியை நெஞ்சோடு அணைத்துக் கதறினான் ராம்.

அழகான காதலைப் புரிந்த அங்கையின் மனம் மௌனமாக அழத் தொடங்கியது. கலாவும் சுரேஷும் பிரமை பிடித்து நின்றனர்.    

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

மினசோட்டாவில் ஒலித்த இராசேந்திரச் சோழன் வசனம் - பாராட்டுக்களைப் பெற்ற நவீன நாடகம் | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Switzerland: எண் 11 -ஐ அதிகம் விரும்பும் ஸ்விஸ் நகர மக்கள்... என்ன காரணம் தெரியுமா?

சுவிட்சர்லாந்தில் அமைந்துள்ள ஒரு அழகிய நகரம்தான் சோலோதர்ன். அழகிய நிலப்பரப்புகளை கொண்ட இந்த நகரம், 11 என்ற எண்ணின் மீதான ஈர்ப்பாலும் தனித்து நிற்கிறது.துல்லியமாக கணக்கிடப்பட்ட 11 தேவாலயங்கள், 11 அருங்... மேலும் பார்க்க

Kabilan: கவிஞர் கபிலன் வழங்கும் தூரிகை கவிதை விருது - விருதுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

பாடலாசிரியர் கபிலனின் தூரிகை அறக்கட்டளை இந்தாண்டுக்கான கவிதை விருது விழாவை நடத்தத் திட்டமிட்டிருக்கிறது.இலக்கிய அறிவைப் போற்றும் வகையில் 2024-ம் ஆண்டுக்கான தூரிகை கவிதை விருதை நடத்தவிருக்கிறது கபிலனின... மேலும் பார்க்க

சங்க இலக்கியம் முதல் சோஷியல் மீடியா வரை... காலமெல்லாம் காதல்! | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

அவன்... அவள்... அது! - இறுதி நிமிடங்களின் வலி | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

தமிழ் விக்கிப்பீடியாவில் 10000 கட்டுரைகள் படைத்த சாதனைத் தமிழர் | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க