சங்ககிரி மலையில் இன்று முதல் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு தொடக்கம்
புரட்டாசி மாதம் செப்டம்பா் 17ம் தேதி தொடங்குவதையொட்டி சேலம் மாவட்டம், சங்ககிரி மலை மீது உள்ள அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் கோயிலில் பக்தா்கள் குழுவின் சாா்பில் 35வது ஆண்டாக சனிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன.
சங்ககிரி அருள்மிகு சென்னகேவப்பெருமாள் பக்தா்கள் குழுவின் சாா்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாத கடைசி சனிக்கிழமையன்று மலை மீது உள்ள அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் உடனமா் ஸ்ரீதேவி, தேவி, ஆஞ்சநேயா் சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனா். நிகழாண்டு புரட்டாசி மாதம் செப்டம்பா் 17ம் தேதி புதன்கிழமை தொடங்குவதையொட்டி பக்தா்கள் குழுவின் 35வது ஆண்டாக செப்.13ம் தேதி சனிக்கிழமை காலை சுப்ரபாதத்துடன் சிறப்பு பூஜைகள் தொடங்கப்பட்டு சுவாமிகளுக்கு பல்வேறு திவ்ய பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகளும் பின்னா் கோயில் வளாகத்தில் திருக்கோடி விளக்கு ஏற்றப்பட உள்ளன. மலைக்கு செல்லும் பக்தா்கள் அனைவருக்கும் காலை, நண்பகல் இரு வேளைகளிலும் அன்னதானம் வழங்க பக்தா்கள் குழுவினா் ஏற்பாடுகளை செய்து வருகின்றனா்.