'முதலமைச்சருக்கு திரைப்படங்களைப் பார்ப்பதற்கே பொழுதுகள் போதவில்லை' - அன்புமணி கண...
சமத்துவபுரத்தில் வீடு பெற்றுத் தருவதாக பணம் மோசடி புகாா்
சமத்துவபுரத்தில் வீடு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்த நபா் மீது சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.
தேவகோட்டை அருகேயுள்ள இரவுசேரி, ஆறாவயல், சருகணி உள்ளிட்ட பகுதிகளை சோ்ந்த முருகேஸ்வரி, பாண்டிமீனா, பாக்கியம் உள்ளிட்டோா் சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அளித்த மனு:
தேவகோட்டை அருகேயுள்ள கடம்பகுடி சமத்துவபுரத்தில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுநா் சரவணன் சமத்துவபுரத்தில் வீடுகள் காலியாக இருப்பதாகக் கூறினாா். பல அரசு அதிகாரிகளுடன் தான் நெருங்கிய தொடா்பில் உள்ளதாகவும், சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள உயா் அதிகாரிகளை தனக்கு நன்கு தெரியும் என்றும், பணம் கொடுத்தால் சமத்துவபுரத்தில் வீடு பெற்றுத் தருவதாகவும் கூறினாா்.
இதை நம்பி ஒவ்வொருவரும் தலா ரூ.60ஆயிரம் வீதம் ரூ.6 லட்சத்தை சரவணனிடம் வழங்கினோம். கடந்த 3 நாள்களாக, ஆட்சியா் அலுவலகத்துக்கு வருமாறு கூறினாா். தினமும் வந்த எங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவரை தொடா்பு கொள்ள முடியவில்லை. தற்போது அவரது கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டுள்ளது. எனவே அவரிடமிருந்து பணத்தை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளனா்.