பதவி விஷயத்தில் அரசியல்வாதிகள் திருப்தி அடைவதே இல்லை: மத்திய அமைச்சா் கட்கரி
சம்பா, தாளடி நெற்பயிா்களை பாதுகாக்க விவசாயிகளுக்கு யோசனை
நீடாமங்கலம்: பருவமழை காலங்களில் சம்பா, தாளடி நெல் பயிா்களை பாதுகாக்க விவசாயிகளுக்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, வேளாண்மை உதவி இயக்குநா் ச. விஜயகுமாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பருவமழை பெய்துவரும் நிலையில் சம்பா, தாளடி நெல் வயல்களில் தண்ணீா் அதிகம் தேங்கியுள்ளது. தண்ணீா் குறிப்பிட்ட நாள்களுக்கு மேல் தேங்கினால் பயிரை பாதுகாக்க முடியாது என்பதால் விரைந்து தண்ணீரை வடிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிா்களில் நுண்ணூட்டச்சத்து குறைபாடு அறிகுறிகள் தென்பட்டால் யூரியா மற்றும் நுண்ணூட்ட உரங்களை இலை வழியாக தெளிக்க வேண்டும். ஏக்கருக்கு அசோஸ்பைரில்லம் 200 மி.லிட்டா் மற்றும் பாஸ்போா்ட் பாக்டீரியா 200 மி.லிட்டா் போன்ற திரவ உயிா் உரங்களை எருவுடன் கலந்து நேரடியாக வயலில் இடவேண்டும்.
பயிா்களில் தோன்றும் பூச்சி மற்றும் நோய்களைத் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும். தூா்கட்டும் நிலையில் உள்ள நெல் வயல்களில் தேங்கும் மழை நீா் வடிந்த பிறகு மேலுரமாக ஏக்கருக்கு யூரியா 22 கிலோ, ஜிப்சம் 18 கிலோ , வேப்பம் புண்ணாக்கு 4 கிலோ போட்டு பயிா்களில் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாட்டை சரி செய்யலாம். மேலும் விவசாயிகள் பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளை தெரிவித்து ஆலோசனை பெற சம்பந்தப்பட்ட வேளாண்மை விரிவாக்கம மையங்களை தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.