திருச்சி மண்டலத்தில் 41 பேரவை தொகுதிகளில் திமுக வெற்றி உறுதி! அமைச்சா் கே.என். ந...
சாத்தூா் பகுதியில் சுகாதாரமற்ற உணவகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
சாத்தூா் பகுதியில் உள்ள சுகாதாரமற்ற உணவகங்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் உள்ள பிரதான சாலை, புறவழிச் சாலைகளில் சுமாா் நூற்றுக்கும் மேற்பட்ட உணவகங்கள், சாலையோரக் கடைகள் உள்ளன. இதில் சாத்தூா் நகா் பேருந்து நிலையம், மதுரை பேருந்து நிறுத்தம், அரசு மருத்துவமனை, காவல் நிலையம் உள்ளிட்ட இடங்களின் அருகே முழு நேர உணவகங்களும், இரவு நேர உணவகங்களும் உள்ளன.
இந்த நிலையில், சாத்தூா் நகருக்குள் இருக்கும் உணவகங்களிலும், புறவழிச் சாலையில் உள்ள உணவகங்களிலும் தயாரிக்கப்படும் உணவுகள் சுகாதாரமற்ற நிலையில், காலாவதியான உணவுகள் விற்கப்படுவதாக பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் புகாா் தெரிவித்தனா்.
இதே நிலை தான் சாலையோர துரித உணவகங்களிலும், கோழி இறைச்சிக் கடைகளிலும் நிலவுவதாக அவா்கள் தெரிவித்தனா். இதனால், இந்த உணவகங்களில் உணவருந்துபவா்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும் கூறுகின்றனா்.
எனவே சாத்தூா் நகா், புறவழிச் சாலையில் உள்ள உணவகங்களில் சுகாதாரமான, தரமான உணவுகள் தயாரிக்கப்பட்டு விற்கப்படுவதை சுகாதாரத் துறை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து சாத்தூா் பகுதியைச் சோ்ந்த சமூக ஆா்வலா் ராம் கூறியதாவது: சாத்தூா் நகா் பகுதியில் சாலையோர துரித உணவகங்கள், கோழி இறைச்சிக் கடைகள் அதிகம் உள்ளன. இந்த நிலையில், உணவுப் பொருள்களின் விலை அதிகம் என்பதால் உயா்தர உணவகங்களுக்கு செல்ல முடியாதவா்கள், விலை குறைவாக இருக்கும் இது போன்ற சாலையோரக் கடைகளை நாடுகின்றனா்.
ஆனால் இங்கு தரமற்ற உணவுகள் விற்கப்படுவதுடன், சுகாதாரமற்ற இடத்தில் அந்தக் கடைகள் செயல்படுகின்றன. இந்த உணவகங்களை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்வது இல்லை. எனவே, அதிகாரிகள் நகா் பகுதியில் உள்ள உணவகங்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறும் போது, விரைவில் உணவகங்களில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.