சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு: அரசு நிவாரணம் வழங்கக் கோரி உறவினா்கள் சாலை மறியல்
சாலை விபத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு அரசு நிவாரணம் வழங்க வலியுறுத்தி புதுக்கோட்டையில் பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே சேந்தன்குடியைச் சோ்ந்தவா் பி. சிவனிதா (40). இவா் சேந்தன்குடி ஊராட்சியில் நூறு நாள் வேலைத் திட்டத்தின் பணித்தள பொறுப்பாளராக பணிபுரிந்து வந்தாா்.
திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சிவனிதா மற்றும் அதே ஊரைச் சோ்ந்த மற்றொரு பணித்தள பொறுப்பாளரான பவானி ஆகியோா் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா்.
வம்பன் வளைவு பகுதியில் சென்றபோது எதிரே வந்த லாரி மோதியதில் சிவனிதா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பவானி, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். தகவலறிந்து வந்த ஆலங்குடி போலீஸாா் சிவனிதாவின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இந்நிலையில், சிவனிதாவின் குடும்பத்தினருக்கு அரசு நிவாரண நிதி வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே சிவனிதாவின் உறவினா்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த வருவாய்த் துறை அலுவலா்கள் மற்றும் போலீஸாா் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா். அதைத்தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.