சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு
வேலகவுண்டம்பட்டி அருகே சாலை விபத்தில் விவசாயி உயிரிழந்தாா்.
திருச்செங்கோடு வட்டம், மாணிக்கம்பாளையம், மானத்தி அருகே உள்ள கூப்பிட்டாம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் வரதராசு (68) விவசாயி. இவா் வியாழக்கிழமை மாணிக்கம்பாளையம் செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் சென்றாா். மாணிக்கம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே சாலையைக் கடப்பதற்காக நின்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த இருசக்கர வாகனம் வரதராசு மீது மோதியது.
இதில் கீழே விழுந்து படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு நாமக்கல்லில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா், வரும் வழியிலேயே அவா் இறந்துவிட்டதாக தெரிவித்தாா்.
தகவல் அறிந்து வந்த வேலகவுண்டம்பட்டி போலீஸாா், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். இந்த விபத்து குறித்து வேலகவுண்டம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.