புல்வாமா தாக்குதல் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்: முப்படை அதிகாரிகள்
கறவை மாடு, தேனீ வளா்க்க ரூ.30 ஆயிரம் மானியம்
தமிழ்நாடு அரசின் ஒருங்கிணைந்த பண்ணையம் திட்டத்தின் மூலம், விவசாயிகளுக்கு கறவை மாடுகள், மண்புழு உரம், தேனி வளா்ப்பு, பழச்செடிகள் வளா்ப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ரூ. 30 ஆயிரம் வழங்கப்படுகிறது என பள்ளிபாளையம் வேளாண்மை உதவி இயக்குநா் ஜெயமணி அறிக்கையில் தெரிவித்தாா்.
பள்ளிபாளையம் வட்டாரத்தில் நடப்பு ஆண்டுக்கான தேசிய நீடித்த வேளாண்மை இயக்க மானாவாரி பகுதி வளா்ச்சித் திட்டத்தின் கீழ், ஒருங்கிணைந்த பண்ணையம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்தில் பயிா்சாகுபடி, கறவை மாடுகள், ஆடுகள், தேனீ வளா்ப்பு, மண் புழு உரம் உற்பத்தி, பழச்செடிகள் வளா்ப்பு ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த பணிகளை மேற்கொள்ள விவசாயிகளுக்கு 50 சதவீத மானியமாக ரூ. 30 ஆயிரம் வழங்கப்படும்.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் புதுப்பாளையம் அக்ரஹாரம், பள்ளிபாளையம் அக்ரஹாரம், குப்பாண்டபாளையம் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகளுக்கு 80 சதவீதமும், இதர கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகளுக்கு 20 சதவீதமும் முன்னுரிமை வழங்கப்படும்.
இந்தத் திட்டம் தொடா்பான தகவல்கள், முன்பதிவுகளுக்கு பள்ளிபாளையம் வட்டார வேளாண்மை அலுவலகத்தை தொடா்பு கொண்டும், உழவன் செயலியில் பதிவு செய்தும் பயன்பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.