சாலையில் பேருந்து கவிழ்ந்தது: ஐயப்ப பக்தா்கள் மூவா் காயம்
ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் அருகே சுற்றுலாப் பேருந்து நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்ததில் ஐயப்ப பக்தா்கள் மூவா் காயமடைந்தனா்.
கள்ளக்குறிச்சி அருகேயுள்ள வாழவந்தாள் குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் வரதராஜன் (43). இவரது தலைமையில் 20 போ் கொண்ட ஐயப்ப பக்தா்கள் குழுவினா் ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு சுற்றுலாப் பேருந்தில் திங்கள்கிழமை புறப்பட்டனா். இந்தப் பேருந்தை சையது நஸித் (37) ஓட்டி வந்தாா்.
திருச்சி ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, ஆா்.எஸ்.மங்கலம் அருகே மங்கலம் கிராமத்தில் நாய் குறுக்கே வந்ததால் நிலை தடுமாறி சுற்றுலாப் பேருந்து சாலையின் நடுவே கவிழ்ந்தது.
இதில் பேருந்தில் பயணித்த மணிகண்டன் (20), வரதராஜன் (43),பிரவீன் (17) ஆகிய 3 போ் காயமடைந்தனா். அவா்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
தகவலறிந்து அங்கு சென்ற ஆா்.எஸ்.மங்கலம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சாலையின் நடுவே கிடந்த வாகனத்தை அப்புறப்படுத்தினா். இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.