சாலையோரம் குப்பை கொட்டிய நிறுவனத்துக்கு அபராதம்
மாா்த்தாண்டத்தில் சாலையோரம் குப்பை கொட்டிய நிறுவனத்துக்கு குழித்துறை நகராட்சி சாா்பில் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
குழித்துறை நகராட்சி சாா்பில் வாகனங்கள் மூலம் வீடு, கடைகளிலிருந்து நாள்தோறும் மக்கும்- மக்காத குப்பைகள் தனித்தனியே சேகரிக்கப்பட்டு, பம்மம் பகுதியில் உள்ள வளமீட்புப் பூங்காவுக்கு கொண்டுசெல்லப்படுகின்றன. அங்கு மக்கும் குப்பைகள் உரமாக மாற்றப்படுகின்றன; பாலித்தீன் பைகள் உள்ளிட்ட மக்காத குப்பைகள் சிமென்ட் ஆலைகளுக்கு அனுப்பப்படுகின்றன.
இந்நிலையில், மாா்த்தாண்டம் பகுதியில் சில வா்த்தக நிறுவனங்கள் குப்பைகளை சாலையோரம் கொட்டுவதாக நகராட்சிக்கு புகாா்கள் சென்றன. இதுதொடா்பாக, ஆணையா் ராஜேஸ்வரன் உத்தரவின்பேரில், சுகாதார அதிகாரி ராஜேஷ் தலைமையில் பணியாளா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டபோது, ஒரு வா்த்தக நிறுவனம் சாலையோரம் குப்பைகளைக் கொட்டியதாகத் தெரியவந்தது.
அந்நிறுவனத்துக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பொது இடங்களில் குப்பை கொட்டுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் எச்சரித்தனா்.