சிதிலமடைந்த சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை
கந்தா்வகோட்டை அருகே சிதிலமடைந்த நிலையில் உள்ள சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், கந்தா்வகோட்டை- கறம்பக்குடி சாலையில் உள்ள வெள்ளாளவிடுதி ஊராட்சியில் சுமாா் 1200 மக்கள் வசித்து வருகின்றனா்.
இவா்கள் தினசரி அலுவல் காரணமாக கந்தா்வகோட்டைக்கோ அல்லது கறம்பக்குடிக்கோ செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்தச் சாலையில் அரசு பேருந்துகளும், தனியாா் வாகனங்களும், இருசக்கர வாகனங்களும் சென்று வருகின்றன. மேலும், பள்ளி மாணவா்கள் இந்த சாலையில்தான் சைக்கிளில் சென்று வருகின்றனா்.
இந்தச் சாலையில் ஜல்லி கற்கள் பெயா்ந்து கிடப்பதால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது .எனவே, மாநில நெடுஞ்சாலை துறையினா் கவனத்தில் கொண்டு சாலையை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.