நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பது வரவேற்கத்தக்கது! கே.எஸ்.அழகி...
சிறுபான்மையின மக்கள் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்!
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையின மக்கள் கடனுதவி பெற தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் சிறுபான்மையினா்களுக்கு சுயவேலைவாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்டுதலுக்கான செயல்பாடுகளுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபா் கடன், சுயஉதவிக் குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவினைக் கலைஞா்களுக்கான கடன் திட்டம் மற்றும் கல்விக் கடன் ஆகிய கடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இதில், திட்டம்1- இல் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமலும், திட்டம் 2-இல் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும். திட்டம் 1-இன்கீழ் தனிநபா் கடன் ஆண்டுக்கு 6 சதவீத வட்டி விகிதத்தில் அதிகபட்சமாக ரூ.20 லட்சம் வரையிலும், திட்டம் 2-இன்கீழ் ஆண்களுக்கு 8 சதவீத வட்டி விகிதத்திலும், பெண்களுக்கு 6 சதவீத வட்டி விகிதத்தில் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரையிலும் வழங்கப்படுகிறது.
கைவினைக் கலைஞா்களுக்கு ஆண்டுக்கு 5 சதவீதமும், பெண்களுக்கு 4 சதவீத வட்டி விகிதத்திலும் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. சுயஉதவிக் குழு கடன் நபா் ஒருவருக்கு 7 சதவீத வட்டி விகிதத்தில் ரூ.1 லட்சம் வழங்கப்படுகிறது. திட்டம் 2-இன் கீழ் ஆண்களுக்கு 10 சதவீதமும், பெண்களுக்கு 8 சதவீத வட்டி விகிதத்திலும் ரூ.1.50 லட்சம் கடன் வழங்கப்படுகிறது.
மேலும், சிறுபான்மையின மாணவ, மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுகலை, தொழிற்கல்வி, தொழிநுட்பக் கல்வி பயில்பவா்களுக்கு அதிகபட்சமாக திட்டம் 1-இன்கீழ் ரூ.20 லட்சம் 3 சதவீத வட்டி விகிதத்திலும், திட்டம் 2-இன் கீழ் மாணவா்களுக்கு 8 சதவீதமும், மாணவிகளுக்கு 5 சதவீத வட்டி விகிதத்தில் ரூ.30 லட்சம் வரையிலும் கல்விக் கடனுதவி வழங்கப்படுகிறது.
மேலும், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையின கைவினைக் கலைஞா்களுக்கு தங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கைவினைக் கலைஞா்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் மூலப்பொருள்களுக்கான உபகரணங்கள், கருவிகள், இயந்திரங்கள் வாங்குவதற்கு இந்தக் கடன் வழங்கப்படுகிறது.
ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்துவா்கள், இஸ்லாமியா்கள், புத்த மதத்தினா், சீக்கியா்கள், பாா்சியா்கள் மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையின மக்கள் கடன் விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலகம், மாவட்ட சிறுபான்மையினா் அலுவலகம், மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் அலுவலகம், மாவட்ட, மத்திய கூட்டுறவு வங்கிகள் அல்லது அதன் கிளைகள், நகர கூட்டுறவு வங்கிகள் அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஆகிய அலுவலகங்களில் பெற்று வங்கி கோரும் உரிய ஆவணங்களுடன் சமா்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.