தடுப்புச்சுவரில் சிற்றுந்து மோதி விபத்து: பெண்கள் உள்பட 10 போ் காயம்
சிவகங்கை: கண்டதேவி கோயில் தேரோட்டம்!
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகேயுள்ள கண்டதேவி கிராமத்தில் உள்ள அருள்மிகு பெரியநாயகி அம்பிகா சமேத சொர்ணமூர்த்தீஸ்வரர் ஆலயத்திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை காலையில் தேரோட்டம் நடைபெற்றது.
தேவகோட்டை அருகே கண்டதேவியில் சிவகங்கை தேவஸ்தானத்துக்கு பாத்தியப்பட்ட சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் உள்ளது. தென்னிலை, உஞ்சனை, செம்பொன்மாரி, இறகுசேரி ஆகிய 4 பகுதிகளைச் (நாடு) சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இங்கு வழிபட்டு வருகின்றனர்
தேர்வடம் பிடித்து இழுப்பதில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட பிரச்னையால் கடந்த 1998-ல் தேரோட்டம் நின்று போனது. பின்னர் பலத்த பாதுகாப்புடன் 2002 முதல் 2006 வரை தேரோட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கும்பாபிஷேக திருப்பணிகளுக்காக மீண்டும் தேரோட்டம் நிறுத்தப்பட்டது.
2012-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்ற பின்னர், தேர் பழுதானதாகக் கூறி, தேரோட்டத்தை நடத்தவில்லை. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர், தேர் புதுப்பிக்கப்பட்டது. ஆனால், தேர் வெள்ளோட்டம் நடத்தப்படாமல் இருந்தது. இதனைத் தொடர்ந்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம் உடனடியாக தேரோட்டம் நடத்த வேண்டுமென 2020-ஆம் ஆண்டு உத்தரவிட்டது.
அப்போது கரோனா முடக்கம் காரணமாக தேரோட்டம் நடைபெறவில்லை. இந்நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த உயர்நீதிமன்றம் 2024 -ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21- ஆம் தேதி தேரோட்டம் நடத்த மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது.
இதையடுத்து, மாவட்ட நிர்வாகம், தேவஸ்தானம், கிராம மக்கள் ஆகியோர் பங்கேற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில், கடந்த பிப்ரவரி 11 -ஆம் தேதி புதுப்பிக்கப்பட்ட தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. ஜூன் 13 ஆம் தேதி கோயில் திருவிழாவிற்கென காப்புக்கட்டப்பட்டது. அதன்படி 17 ஆண்டுகளுக்கு பிறகு கடந்தாண்டு ஜூன் 21-ஆம் தேதி தேரோட்டம் வழக்கமாக மாலையில் நடைபெறும் தேரோட்டம் காலையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
நிகழாண்டுக்கான தேரோட்டம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) அமைதியாக நடைபெற்றது. இதையொட்டி காலை 6 மணிக்கு பிரியாவிடையுடன் சொர்ணமூர்த்தீஸ்வரர் பெரிய தேரிலும், பெரியநாயகி அம்பிகா சிறிய தேரிலும் உலாவந்தனர்.
தேருக்கு முன்னால் சென்ற சப்பரத்தில் விநாயகர், முருகன், சண்டிகேஸ்வர் உலா வந்தனர். காலை 6.45 மணிக்கு அனைத்து சமூகத்தினரும் வடம்பிடித்து இழுக்க, தேரோட்டம் தொடங்கியது. மணிக்கு 7.45 மணிக்கு தேர் நிலைக்கு வந்தது.

விழாவில், கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி, கோட்டாட்சியர், மாவட்ட வருவாய்த்துறையினர், அறநிலையத் துறையினர், தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் 170 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பங்கேற்றனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை மதுரை மாநகர் ஆணையர் லோகநாதன், ராமநாதபுரம் டிஐஜி மூர்த்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் அரவிந்த் (மதுரை), சந்தீஷ் (சிவகங்கை) உள்பட 5 காவல் கண்காணிப்பாளர்கள், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணைக் கண்காணிப்பாளர்கள் கண்காணித்தனர். காவல் ஆய்வாளர்கள் உள்பட 2,000 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதையொட்டி கண்டதேவி கிராமம் முழுவதும் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தேரோட்ட நிகழ்வுகள் கண்காணிக்கப்பட்டன.
Sivaganga: Kandadevi Temple Chariot Parade!
இதையும் படிக்க :கடலூர்: பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்து! மாணவர்கள் 2 பேர் பலி!