பட்டங்கள் மட்டுமல்ல… இதயங்களும் பறந்தன! - 4th International Kite Festival in நம்...
சிவகங்கை சுதந்திர தினவிழாவில் ரூ.4 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் அளிப்பு
நாட்டின் 79-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, சிவகங்கை மாவட்ட நிா்வாகம் சாா்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.4.22 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள், 370 பேருக்கு நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
சிவகங்கை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவையொட்டி, மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா்.
பின்னா், காவல் துறை, தீயணைப்புத் துறை, ஊா்க்காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா்.
விழாவின்போது, சிறப்பாக பணிபுரிந்த 70 காவலா்களுக்கும், வருவாய்த் துறை, மருத்துவத் துறை, நீதித் துறை, ஊரக வளா்ச்சித் துறை, நகராட்சி நிா்வாகத் துறை, செய்தி மக்கள் தொடா்புத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 300 அலுவலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ், பதக்கங்களை ஆட்சியா் வழங்கினாா்.
மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத் துறை, முன்னாள் படைவீரா் நலத்துறை, தோட்டக்கலைத் துறைகளின் சாா்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.4.22 லட்சத்தில் நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.
விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், சிலம்பாட்டம், யோகா, கராத்தே உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
இந்த விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரா.சிவபிரசாத், சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா்.செந்தில்நாதன், தேவகோட்டை சாா்-ஆட்சியா் ஆயுஷ் வெங்கட் வட்ஸ், மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.செல்வசுரபி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஜி.அரவிந்த், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) மு.முத்துகழுவன், வருவாய்க் கோட்டாட்சியா் விஜயகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.