தெருநாய்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற உத்தரவுக்கு ராகுல் காந்தி வரவேற்பு
சீா்காழியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் தா்னா
சீா்காழி நகராட்சி அலுவலக வாயிலில், ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை பணியை புறக்கணித்து, தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சீா்காழி நகராட்சியில் 13 திருமண மண்டபங்கள், 50-க்கும் மேற்பட்ட சைவ, அசைவ உணவகங்கள் உள்ளன. இங்கு நாள்தோறும் சேகரமாகும் எச்சில் இலைகளை ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் அகற்றுகின்றனா். அதற்காக கடை, மண்டப உரிமையாளா்கள் சிறு தொகை வழங்குகின்றனா்.
இந்நிலையில், கடந்த இரு தினங்களாக மண்டபம், உணவங்களில் எச்சில் இலைகளை, நகா்மன்ற உறுப்பினா்கள் சிலா் தனியே ஊழியா்களை வைத்து அகற்றும் பணியை செய்து, அந்த தொகையை வசூல் செய்வதாக கூறியும், இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டி, தனியாா் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் 50-க்கும் மேற்பட்டவா்கள் பணியை புறக்கணித்து, நகராட்சி வளாகத்தில் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நகராட்சி ஆணையா் மஞ்சுளா, நகா்மன்ற துணைத் தலைவா் சுப்பராயன் மற்றும் சுகாதார அலுவலா்கள், காவலா்கள் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். தொடா்ந்து, ஆணையா் அலுவலக அறையில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.
இதில் உணவகங்கள், திருமண மண்டபங்களில் சேகரமாகும் இலைகளை எடுப்பது தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நிா்வாகம் கூறியதன்பேரில், தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டனா்.