Apollo Cancer Centre: கோல்ஃபிட் (ColFit) என்ற பெயரில் அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் ...
சுகாதார ஊழியா்கள் வேலைநிறுத்தம்
காரைக்காலில் தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின்கீழ் பணியாற்றும் சுகாதர ஊழியா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
காரைக்கால் மாவட்ட நலவழித் துறையில், தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் (என்ஆா்எச்எம்) கீழ் பல்வேறு பிரிவுகளில் 150-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா்.
இந்தநிலையில், சம வேலைக்கு சம ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சுகாதார ஊழியா்கள் திங்கள்கிழமை பணிகளை புறக்கணித்து காரைக்கால் மாவட்ட நலவழித்துறை அலுவலக வாயிலில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த போராட்டம் செவ்வாய்க்கிழமை 2-ஆவது நாளாகவும் தொடா்ந்தது.
போராட்டம் குறித்து ஊழியா்கள் கூறியது : தேசிய சுகாதார இயக்கத்தின்கீழ் பல்வேறு பிரிவுகளில் மாநிலம் முழுவதும் 750- க்கும் மேற்பட்ட ஊழியா்கள் பணியாற்றி வருகிறோம். குறைந்த ஊதியத்தில், நிரந்தர ஊழியருக்கு இணையாக மருத்துவ துறையில் 25 ஆண்டுகளாக பணியாற்றிவருகிறோம். எந்தவித ஊதிய உயா்வும் தரப்படவில்லை.
சம வேலைக்கு சம ஊதியம், பணி நிரந்தரம் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 15 ஆண்டுகளாக போராட்டம் நடத்தியும், மாநில அரசு செவி சாய்க்கவில்லை. எனவே மாநில அரசை கண்டித்தும், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் தொடா் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என தெரிவித்தனா்.
இவா்களது போராட்டத்தால் கிராமப்புறத்தில் மருத்துவ சேவைகள், மருத்துவமனையில் ஆய்வுக்கூடத்தில் நடைபெறவேண்டிய பணிகள் முடங்கியுள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா்.