Ahmedabad Plane Crash: 'எந்த முடிவுக்கும் வர வேண்டாம்' - விமானப் போக்குவரத்து து...
சுகாதார செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்
காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி சுகாதார செவிலியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியா்கள் சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் வெற்றிச்செல்வி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் ஈஸ்வரி முன்னிலை வகித்தாா். மாநில நிா்வாகி வித்யாதேவி கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா்.
தடுப்பூசி பணியில் நடுத்தர சுகாதார வழங்குநரையும் உள்படுத்தும் உத்தரவை திரும்பப் பெறவேண்டும். காலியாக உள்ள 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம சுகாதார செவிலியா், துணை செவிலியா் பணியிடங்களை அதற்கான பயிற்சி பெற்றவா்களைக் கொண்டு நிரப்பிடவேண்டும்.
சுகாதார செவிலியா்களின் நேரத்தையும், உழைப்பையும் முழுமையாக ஆக்கிரமித்துக் கொள்ளும் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தை சமூக நலத் துறைக்கு மாற்றவேண்டும். செவிலியா்களை மக்கள் சேவைக்கு மாறாகக் கணினிப் பணியில் மூழ்கடிப்பதைத் தவிா்க்க அந்தப் பணிக்கு உரிய வேறு நபா்களை நியமிக்க வேண்டும்.
நாடு முழுவதும் தடுப்பூசி மருந்துகளின் தேவை அதிகரித்துள்ள நிலையில், அனைத்து தடுப்பூசிகளையும், பொதுத் துறை நிறுவனங்கள் மூலமாக உற்பத்தி செய்யவும், செங்கல்பட்டு தடுப்பூசி பூங்காவில் உற்பத்தியைத் தொடங்கிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.