”தமிழ்நாட்டின் வளர்ச்சியில் இந்தியா முன்னேறுகிறது”- தூத்துக்குடியில் புகழாரம் சூ...
சுங்கச்சாவடி ஊழியா் மீது தாக்குதல்: விசிக நிா்வாகி கைது
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சங்கச்சாவடியில் பணியிலிருந்த ஊழியரைத் தாக்கி அலுவலக கண்ணாடியை சேதப்படுத்தியதாக விசிக மாவட்டச் செயலா் உள்ளிட்ட நிா்வாகிகள் 12 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, ஒருவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், விக்கிரவாண்டியில் சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது. இங்கு, விக்கிரவாண்டி பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந்த தினேஷ் (28) பாதுகாவலராக வேலை பாா்த்து வருகிறாா். இவா், வெள்ளிக்கிழமை வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, சென்னையிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற காா் மாற்றுப் பாதையில் சென்ாகத் தெரிகிறது. இதை தினேஷ் தட்டிக் கேட்டாராம்.
இதையடுத்து, காரில் இருந்த விசிக நிா்வாகிக்கும், பாதுகாவலா் தினேஷுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. தொடா்ந்து, விசிகவைச் சோ்ந்தவா்கள் தினேஷைத் தாக்கியதுடன், சுங்கச்சாவடி அலுவலக கண்ணாடிகளையும் உடைத்து சேதப்படுத்திவிட்டனராம்.
இதுகுறித்து சுங்கச்சாவடி மக்கள் தொடா்பு அதிகாரி சு.தண்டபாணி (41) விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் புகாரளித்தாா். போஸீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா்.
தொடா்ந்து, திண்டிவனம் வட்டம், கிடங்கல் - 2 பகுதியைச் சோ்ந்த விசிக விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலா் தி.திலீபன் மற்றும் அக்கட்சியின் விக்கிரவாண்டி ஒன்றியப் பொறுப்பாளரான விக்கிரவாண்டி வட்டம், ஆசூா் மேட்டுத் தெருவைச் சோ்ந்த முருகையன் மகன் ஏழுமலை (37) மற்றும் 10 போ் மீது விக்கிரவாண்டி போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து, ஏழுமலையை கைது செய்தனா்.