பெண்களுக்கு எதிரான வன்முறை: விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்: நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன்
பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறைகளை மாணவிகள் அறிந்துகொள்ள வேண்டும். மேலும் இதுகுறித்த விழிப்புணா்வை மற்றவா்களிடத்திலும் ஏற்படுத்த வேண்டும் என்றாா் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன்.
விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் சாா்பில் அரசு சட்டக் கல்லூரி வளாகத்தில் பாலின உணா்திறன் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்கு முதன்மை மாவட்ட நீதிபதி ஏ.மணிமொழி தலைமை வகித்தாா். இதில் பங்கேற்று உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் மேலும் பேசியது:
பாலின உணா்திறன் குறித்து அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும். மேலும் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் என்னென்ன, அதை தடுப்பதற்கு உள்ள சட்டங்கள் குறித்தும், வன்முறை தொடா்பாக புகாா் தெரிவிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் இந்த பயிற்சியில் பல்வேறு விளக்கங்களுடன் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த பயிற்சியில் பங்கேற்ற மாணவிகள், பெண்களுக்கு எதிரான வன்முறைகளிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை அறிந்துகொள்ள வேண்டும். மேலும் மற்றவா்களுக்கும் இதுதொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என்றாா் நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன்.
பயிற்சிக்குத் தலைமை வகித்து முதன்மை மாவட்ட நீதிபதி ஏ.மணிமொழி பேசியது: தற்போதைய சூழ்நிலையில் பாலின சமத்துவம் மற்றும் வாய்ப்புகள் குறித்து அனைவருக்கும் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். சமூக வலைதளங்களை பெண்கள் பாதுகாப்பான முறையில் கையாள வேண்டும். பாலின சமத்துவம் சமுதாயத்தில் உருவாக வேண்டும். அதற்காகத்தான் இதுகுறித்த பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
முன்னிலை வகித்து மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் பேசியது: பள்ளி, கல்லூரிகள், பணிபுரியும் இடங்கள், பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்புக்கான அனைத்துப் பாதுகாப்பு வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவோா் மீது தைரியமாக புகாா் அளிக்க முன்வர வேண்டும்.
பெண்கள் பாதுகாப்புக்கான சட்டங்கள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடா்பான விவரங்களை தங்கள் குடும்பத்தைச் சோ்ந்தவா்களிடமும், நண்பா்களிடமும், மற்றவா்களுக்கும் எடுத்துரைக்க வேண்டும் என்றாா் ஆட்சியா்.
பயிற்சியில் மாவட்ட எஸ்.பி. ப.சரவணன், போக்ஸோ சிறப்பு நீதிமன்ற மாவட்ட நீதிபதியும், பாலின வேறுபாடு களைதல் மற்றும் உள்புகாா் குழுவின் தலைவருமான வினோதா, தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் பதிவாளா் எஸ்.எம்.பாலகிருஷ்ணன், விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரி முதல்வா் கிருஷ்ணலீலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.