மலையாள திரையுலகில் முதல் பெண் தலைவர்! சர்ச்சைகளுக்கு மத்தியில் வெற்றி!
சுதந்திர நாள் கொண்டாட்டத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம்!
ஆஸ்திரேலியாவின் மெல்பர்னில் இந்தியாவின் சுதந்திர தின கொண்டாட்டங்களை சீர்குழைக்கும் விதமாக காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீக்கிய மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு காலிஸ்தான் என்ற பெயரில் இந்தியாவின் பஞ்சாப் மற்றும் பாகிஸ்தானின் பஞ்சாபை இணைத்து தனி நாடு வேண்டும் என காலிஸ்தான் ஆதரவாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர், இந்திய சுதந்திர நாள் கொண்டாட்டத்தில் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் உள்ளூர் செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள விடியோவில், ஆஸ்திரேலியவாழ் இந்தியர்கள் மூவர்ணக் கொடியுடன் கொண்டாட்டங்களில் ஈடுபடுவதும் அவர்களுக்கு எதிராக காலிஸ்தான் ஆதரவாளர்கள் அவர்களது கொடிகளுடன் போராட்டத்தில் ஈடுபடுவதும் பதிவாகியுள்ளது.
சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் அந்த விடியோவில் ஆஸ்திரேலியவாழ் இந்தியர்கள் பாடல்கள் பாடுவதையும், அவர்களை எதிர்த்து மஞ்சள் நிற காலிஸ்தான் கொடியுடன் காலிஸ்தான் ஆதரவாளர்கள் கோஷம் எழுப்புவதையும் அந்த விடியோவில் காணமுடிகிறது.
ஆஸ்திரேலியா முழுவதும் காலிஸ்தான் ஆதரவு நடவடிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில், இந்தச் சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த மாதம், மெல்பர்னில் உள்ள சுவாமிநாராயண் கோயிலும் இரண்டு உணவகங்களிலும் கிரஃப்டி எனப்படும் பெயிண்டுகளைக் கொண்டு ஆபாச வார்த்தைகளை எழுதி காலிஸ்தான் ஆதரவாளர்கள் அட்டூழியத்தில் ஈடுபட்டனர்.
போரோனியாவில் அமைந்துள்ள கோயிலின் வளாகத்தில், "வீட்டிற்குச் செல்லுங்கள் ****" என்ற ஆபாச வாசகத்துடன் ஹிட்லரின் படம் வரையப்பட்டிருந்தது.
சமீபகாலமாகவே இந்தியர்கள் மற்றும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் இடையிலான மோதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஆஸ்திரேலியாவைத் தவிர்த்து, இந்த வாரத்தில் அயர்லாந்திலும் இந்தியர்கள் மீது இனவெறித் தாக்குதல்கள் நடத்தப்பட்டது.
முன்னதாக, 2024 ஆம் ஆண்டில், இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டியின் போது, காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்திய ரசிகர்களுடன் மோதலில் ஈடுபட்டது நினைவுகூரத்தக்கது.