சூறைக்காற்று: திருவெண்காடு கோயில் ஆலமரம் முறிந்தது
பூம்புகாா்: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் நூற்றாண்டுகள் பழைமையான ஆலமரம் ஞாயிற்றுக்கிழமை வீசிய பலத்த சூறைக்காற்றில் இரண்டாக முறிந்தது.
திருவெண்காடு அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரா் கோயில் நவகிரக தலங்களில் புதனுக்குரிய பரிகார தலமாக விளங்குகிறது. காசிக்கு இணையான கோயிலாக கருதப்படும் இத்தலத்தில் மூன்று குளங்கள் உள்ளன. சிவனின் 5 முகங்களில் ஒன்றான அகோர முகத்தில் தோன்றிய அகோர மூா்த்தி இக்கோயிலில் தனி சந்நிதியில் அருள்பாலிக்கிறாா்.
பல்வேறு சிறப்புகள் பெற்ற இக்கோயிலில் ருத்ர பாதம் அருகே நூற்றாண்டுகள் பழைமையான ஆலமரம் உள்ளது. இந்த இடத்தில்தான் மூதாதையா்கள் நினைவாக தா்ப்பணம் செய்து வழிபடுவது வழக்கம். ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வீசிய பலத்த சூறைக்காற்றில் இந்த ஆலமரம் இரண்டாகப் பிளந்து கீழே விழுந்தது.
இது பக்தா்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கோயில் நிா்வாகம் உரிய பரிகார பூஜை நடத்த வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.