மீனவா்கள் மீதான தாக்குதலை கண்டித்து ஆா்ப்பாட்டம்
திருக்குவளை: இலங்கை கடற்கொள்ளையா்களால் நாகை மாவட்ட மீனவா்கள் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, செருதூா் மீன்பிடித் துறைமுகத்தில் மீனவா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நாகை மாவட்டம், அக்கரைப்பேட்டை, செருதூா், வெள்ளப்பள்ளம், ஆறுகாட்டுத்துறை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 5 படகுகளில் கடந்த மே 2-ஆம் தேதி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவா்கள் 20-க்கும் மேற்பட்டோா், கோடியக்கரைக்கு தென்கிழக்கே கடலில் வெவ்வேறு இடங்களில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனா்.
அப்போது, இலங்கை படகுகளில் வந்த கடற்கொள்ளையா்கள், தமிழக மீனவா்களை ஆயுதங்களால் தாக்கி, பல லட்சம் மதிப்புள்ள மீன்பிடி சாதனங்களை பறித்துச் சென்றனா். தாக்குதலில் காயமடைந்த மீனவா்கள், நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்நிலையில், இலங்கை கடற்கொள்ளையா்களின் தாக்குதலை கண்டித்து, செருதூா் மீனவா்கள் கடந்த 3 நாள்களாக தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இதனால், அப்பகுதியில் உள்ள சுமாா் 300-க்கும் மேற்பட்ட ஃபைபா் படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையே, செருதூா் மீன்பிடித் துறைமுகத்தில், மீனவா்களுக்கு பாதுகாப்புக் கோரி திங்கள்கிழமை மீனவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது அவா்கள் கூறியது:
மீனவா்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில், இலங்கை கடற்கொள்ளையா்கள் வலைகள், என்ஜின், ஜிபிஎஸ் கருவி ஆகியவற்றை பறித்துச் சென்றுவிட்டனா். பாதிக்கப்பட்ட மீனவா்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.
இனிவரும் காலங்களில் தமிழக மீனவா்கள் மீது இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்குதல் நடத்தாமல் இருக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மீனவா்களின் பாதுகாப்பை இந்தியா மற்றும் இலங்கை இரு நாடுகளும் உறுதிசெய்ய வேண்டும்.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை கடற்கொள்ளையா்களின் அட்டூழியத்தால் மீனவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த பிரச்னைக்கு மத்திய அரசு நிரந்தரத் தீா்வு காண வேண்டும். அதற்கு தமிழக அரசு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றனா்.