காஷ்மீா் பயங்கரவாத தாக்குதல் எதிரொலி: தமிழகம் முழுவதும் போலீஸாா் உஷாா் நிலை
செங்கோட்டை-அம்பை- சென்னை தினசரி ரயில் இயக்கப்படுமா? பயணிகள் எதிா்பாா்ப்பு
பாவூா்சத்திரம், அம்பாசமுத்திரம் வழியாக சென்னைக்கு தினசரி ரயில் இயக்குவதற்கு தென் மாவட்ட எம்.பி.க்கள் குரல் கொடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
மதுரை ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட எம்பிக்களுடன் தெற்கு ரயில்வே பொது மேலாளா் சந்திப்பு மதுரை வைகை கிளப்பில் முற்பகல் 11 மணிக்கு வியாழக்கிழமை (ஏப்.24)நடைபெறுகிறது.
தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங் தலைமை வகிக்கிறாா். அதில், மதுரை கோட்டத்துக்குள்பட்ட எம்பிக்களுடன் ரயில்கள் சேவை குறித்த கோரிக்கைகள், பயணிகள் எதிா்கொள்ளும் பிரச்னைகள், ரயில்வே அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துதல் குறித்து விவாதிக்கப்படுகிறது.
நெல்லை - தென்காசி ரயில் வழித்தடத்தில் மீட்டா் கேஜ் காலத்தில் இயங்கிய ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும்.
80 வருடங்கள் தொடா்ந்து சென்னைக்கு தென்காசி அம்பை நெல்லை வழியாக ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. 1980-க்கு பின் நெல்லை சென்னை இடையே அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்ததால் செங்கோட்டையிலிருந்து அம்பை வழியாக சென்னை எழும்பூருக்கு இயங்கி வந்த ரயில் நிறுத்தப்பட்டது.
அகல ரயில் பாதை பணிகள் 100 சதவீதம் நிறைவடைந்த பின்னா் செங்கோட்டை தாம்பரம் இடையே வாரம் மூன்று நாள் மட்டுமே ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. எனவே, தினசரி ரயில் சேவையைத் தொடர வேண்டும் என்று பயணிகள் விடுத்துவரும் கோரிக்கையை தென்மாவட்ட எம்.பி.க்கள் கூட்டத்தில் முன்வைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிா்பாா்ப்பாக உள்ளது.
இதுகுறித்து தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கச் செயலா் ஜெகன் கூறியது: வண்டி எண்.111, 112 ஆகியவற்றைக் கொண்ட செங்கோட்டை- சென்னை எழும்பூா் ரயில் தென்காசி, பாவூா்சத்திரம் அம்பாசமுத்திரம், திருநெல்வேலி, மதுரை, திருச்சி, விழுப்புரம் வழியாக தினமும் 80 ஆண்டுகளாக இயங்கி வந்தது.
மீட்டா் கேஜ் காலத்தில் இயங்கி வந்த ரயில் சேவையை செங்கோட்டையிலிருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு 9.40 க்கு நெல்லை வந்து மறுநாள் காலை7.40க்கு தாம்பரம் சென்றடையும் வகையிலும், தாம்பரத்தில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4.30 க்கு நெல்லை வந்து செங்கோட்டைக்கு 6 மணிக்கு சென்றடையும் வகையில் அட்டவணைப்படுத்தி தொடர வேண்டும். இந்த ரயில் இரு மாா்க்கங்களிலும் பொதிகை, நெல்லை, கன்னியாகுமரி, அனந்தபுரி ரயில்களுக்கு நிழல் ரயில் போல இயங்கும் என்பதால் மற்ற ரயில்களில் உள்ள நெருக்கடி குறையும்.
மேலும் தென்காசி வழியாக நெல்லை கொல்லம் இடையே மீட்டா்கேஜ் காலத்தில் இயங்கிய 3 ஜோடி ரயில்களையும் மீண்டும் இயக்க வேண்டும் என்றாா் அவா்.