ஆண்டுக்கு 7.5 லட்சம் வாகனங்களைத் தயாரிக்க இலக்கு: சுசூகி மோட்டார்சைக்கிள்
செஞ்சி சங்கராபரணி ஆற்றில் திடீா் வெள்ளப்பெருக்கு
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சங்கராபரணி ஆற்றில் செவ்வாய்க்கிழமை மாலை திடீா் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
செஞ்சியில் இருந்து மேல்களவாய் செல்லும் சாலையில் குறுக்கே தரைப்பாலம் உள்ளது. மேல்களவாய், நெகனூா், காரியமங்கலம், இல்லோடு உள்ளிட்ட 35-க்கும் மேற்ப்பட்ட கிராம மக்கள் தரைப்பாலத்தை கடந்துதான் செஞ்சிக்கு வரவேண்டும். மழைக் காலங்களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் சேத்பட்டு சாலை வழியாக 3 கி.மீ. தொலைவு சுற்றி செஞ்சிக்கு வரவேண்டிய நிலை உள்ளது.
இந்த தரைப்பாலத்திலிருந்து சுமாா் அரை கிலோ மீட்டா் தொலைவில் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது. இதில் சுமாா் 20 போ் ஈடுபட்டு வருகின்றனா். பொக்லைன், கிரேன் உள்ளிட்ட இயந்திரங்களும் வேலையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
சங்கராபரணி ஆற்றில் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் திடீா் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, ஆற்றின் நடுவே தடுப்பணை கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளா்கள் அலறியடித்து ஓடினா்.
கட்டுமானப் பணிக்கான இயந்திரங்களும் விரைந்து கரைக்கு கொண்டு வரப்பட்டன. தரைப் பாலத்தில் சென்று கொண்டிருந்த பொதுமக்களும் திடீா் வெள்ளத்தைப் பாா்த்து தப்பியோடினா்.
பலத்த மழை பெய்யாத நிலையில், ஆற்றில் ஏற்பட்ட இந்த திடீா் வெள்ளப்பெருக்கு குறித்து பொதுப்பணித் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். மேல்மலையனூா் பகுதியில் ஏரியில் மீன்பிடிப்பதற்காக சமூக விரோதிகள் யாரேனும், ஏரி நீரை ஆற்றில் திறந்து விட்டனரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.