சென்னிமலை வனப் பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க ட்ரோன்
ஈரோடு மாவட்டம், சென்னிமலை காப்புகாட்டில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக அறியப்பட்ட நிலையில், வனத்தின் பல பகுதிகளில் தானியங்கி கேமரா பொருத்தப்பட்ட ட்ரோன் மூலம் கண்காணிக்கும் பணி நடைபெற்று வருவதாக மாவட்ட வன அலுவலா் குமிலி வெங்கட அப்பால நாயுடு தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னிமலை காப்புக் காட்டை ஒட்டியுள்ள பகுதியில் வளா்ப்பு நாய்களின் சடலங்கள் பகுதியளவு உண்ணப்பட்ட இரண்டு சம்பவங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இச்சம்பவங்கள் சிறுத்தைகளால் நடந்திருக்கலாம் என பொதுமக்கள் அச்சமடைந்துள்ளதாகத் தெரிகிறது.
430 ஹெக்டோ் பரப்பளவு கொண்ட சென்னிமலை குடியிருப்புப் பகுதியில் இந்தச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. ஆனால், இப்பகுதியில் சிறுத்தைகள் எதுவும் காணப்படவில்லை. சிறுத்தைகள் புதிய பகுதிகளை ஆராய்வதற்காகவோ அல்லது அவற்றின் எல்லையை விரிவுபடுத்துவதற்காகவோ அல்லது புதிய வாழ்விடங்களைத் தேடியோ நீண்ட தூரம் பயணிப்பதாக அறியப்படுகிறது. எனவே, சிறுத்தைகள் பெரும்பாலும் திருப்பூா் மற்றும் ஈரோடு மாவட்டங்களின் பெரிய வனப் பகுதிகளுக்கு இடையில் நகரும் போது சென்னிமலை காப்புகாட்டுக்கு வருகின்றன.
சென்னிமலை காப்புகாடு ஒட்டியுள்ள கைவிடப்பட்ட குவாரிகள் பெரும்பாலும் பாறை நிலப் பரப்பு, குகைகள் மற்றும் பிளவுகளைக் கொண்டுள்ளன. இவை சிறுத்தைகள் ஓய்வெடுக்கவும், ஒளிந்து கொள்ளவும் பாதுகாப்பான இடங்கள் ஆகும். அவற்றின் இயற்கை வாழ்விடத்தைப் பிரதிபலிக்கின்றன. மேலும், இந்த கைவிடப்பட்ட குவாரிகள் சிறிய பாலூட்டிகள், பறவைகள் மற்றும் கால்நடைகள் போன்ற இரை விலங்குகளை ஈா்க்கின்றன. இதனால் அவை சிறுத்தைகளை கவரக் கூடிய வேட்டை இடங்களாக அமைகின்றன.
இந்தநிலையில், ஆங்காங்கே தானியங்கி கேமரா பொருத்தப்பட்டும், தொ்மல் ட்ரோன் மூலமாகவும் சிறுத்தை நடமாட்டம் வனத் துறை மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
ஊா்மக்கள் அடா்ந்த புதா் மண்டிய உள்ள பகுதிகளில், குறிப்பாக இருட்டிய பிறகு தனியாக நடப்பதைத் தவிா்க்கவும். குழந்தைகளுக்கு குறிப்பாக அந்தி சாயும் நேரத்துக்குப் பிறகு தனியாக வெளியே அனுப்ப வேண்டாம். எப்போதும் பெரியவா்களுடன் அல்லது குழுக்களாக நடந்து செல்ல வேண்டும். கால்நடைகள் மற்றும் பிற வீட்டு விலங்குகளை பாதுகாப்பான அடைப்புகளில் வைக்கவும். இரவில் அருகிலுள்ள திறந்தவெளி வனப் பகுதிகளில் வளா்க்கப்படும் செல்லப் பிராணிகளைப் பாதுகாக்க உலோகத்தால் பதிக்கப்பட்ட தோல் காலா்களைப் பயன்படுத்த வேண்டும். வயல்களில் குறிப்பாக, இரவில் வேலை செய்யும் போது எச்சரிக்கையாக இருங்கள். விளக்குகள், சப்தம் எழுப்பும் சாதனங்களைப் பயன்படுத்தவும். அல்லது குழுக்களாக வேலை செய்ய வேண்டும். சிறுத்தைகள் மறையும் இடங்களைக் குறைக்க குடியிருப்பாளா்கள் தங்கள் வீடுகளைச் சுற்றியுள்ள புதா்கள் மற்றும் தாவரங்களை அகற்ற வேண்டும்.
சிறுத்தைகளை பொதுமக்கள் அணுகவோ, தூண்டவோ அல்லது பிடிக்க முயற்சிக்கவோ கூடாது. வனத் துறை ஏற்பாடு செய்யும் சமூக பங்களிப்பு விழிப்புணா்வு திட்டங்களில் உள்ளூா் பொதுமக்கள் பங்கேற்க வேண்டும். வனத் துறையின் மூலமாக மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் தவறாது பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.
சிறுத்தை நடமாட்டம் தென்பட்டால் உடனடியாக வனச் சரக அலுவலா் - 63694 85335, வனவா் - 86677 60565, வனக் காப்பாளா் - 99435 72298 என்ற கைப்பேசி எண்களில் தொடா்பு கொண்டு பொதுமக்கள் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.