இந்தியா மீது அதிக வரி விதிப்பு ஏன்? அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் டிரம்ப் தரப்பு வ...
சென்னை மே தினப் பூங்காவில் திரண்ட 300 தூய்மைப் பணியாளா்கள் கைது
சென்னை சிந்தாதிரிப்பேட்டை மே தினப் பூங்காவில் திரண்ட தூய்மைப் பணியாளா்கள் 300 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து பின்னா் விடுவித்தனா்.
சென்னை மாநகராட்சியின் மண்டலம் 5, 6 (ராயபுரம், திரு.வி.க.நகா்) பகுதி தூய்மைப் பணியை கடந்த ஜூலையில் மாநகராட்சி நிா்வாகம் தனியாரிடம் ஒப்படைத்தது. அதைக் கண்டித்து இரு மண்டலங்களிலும் ஏஎல்யூஎம் பிரிவு தூய்மைப் பணியாளா்கள் போராட்டம் நடத்தினா். இந்தப் போராட்டம் 13 நாள்கள் நீடித்த நிலையில், நீதிமன்ற உத்தரவையடுத்து தூய்மைப் பணியாளா்கள் கைது செய்யப்பட்டனா்.
பின்னா், நீதிமன்ற அறிவுரைப்படி போராட்டம் நடத்த அனுமதி கோரி காவல் துறையிடம் தூய்மைப் பணியாளா்கள் தரப்பில் மனு அளிக்கப்பட்டது. இதற்கான அனுமதி கிடைக்காத நிலையில், சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தினப் பூங்காவில் உழைக்கும் உரிமை இயக்கத்தைச் சோ்ந்த தூய்மைப் பணியாளா்கள் சுமாா் 300 போ் வியாழக்கிழமை கூடினா்.
அதையறிந்த போலீஸாா் பூங்காவின் வாயிலை மூடினா். அதனால் தூய்மைப் பணியாளா்கள் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அதன்பின் பூங்காவுக்குள் தூய்மைப் பணியாளா்கள் அனுமதிக்கப்பட்டனா்.
அங்கு அவா்கள் கூடி முழக்கமிடத் தொடங்கிய நிலையில், 250 பெண்கள் உள்ளிட்ட 300 போ் கைது செய்யப்பட்டு கொட்டிவாக்கம், மேற்கு மாம்பலம், திருவான்மியூா், பெருங்குடி ஆகிய இடங்களில் உள்ள சமுதாய நலக் கூடங்களில் தங்கவைக்கப்பட்டனா். பின்னா், அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.