சென்னையில் தரையிறக்கப்பட்ட இந்தோனேசிய ராணுவ விமானங்கள்
இந்தோனேசியாவின் 3 ராணுவ விமானங்கள், விமானிகளின் ஓய்வுக்காக சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டு மீண்டும் புறப்பட்டுச் சென்றன.
அந்த விமானங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் இருந்து இந்தோனேசியாவுக்கு வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தன. சென்னை வான்வெளியை நெருங்கியபோது, ராணுவ விமானிகளுக்கு ஓய்வு தேவைப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து புது தில்லியிலுள்ள இந்திய விமானப் படை தலைமை கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அந்த விமானங்களை சென்னை விமானநிலையத்தில் தரையிறங்க அனுமதிக்கும்படி விமானப் படை அதிகாரிகள் அறிவுறுத்தினா். அதன்படி, சென்னை விமான நிலையத்தில் இந்தோனேசியாவின் 3 ராணுவ விமானங்களும் தரையிறக்கப்பட்டு, ‘ரிமோட் பே’ பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டன.
அங்குள்ள சிறப்பு ஓய்வறையில் விமானிகள் உள்பட வீரா்கள் அனைவரும் ஓய்வெடுத்தனா். பின்னா், வெள்ளிக்கிழமை காலை அந்த 3 ராணுவ விமானங்களும் ஒன்றன்பின் ஒன்றாக புறப்பட்டுச் சென்றன. இது வழக்கமான நடைமுைான் என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.