திருப்பத்தூரில் சுற்றித் திரியும் கால்நடைகள், நாய்களால் மக்கள் பாதிப்பு!
சென்னையில் நாய் கண்காட்சி: கோவையைச் சோ்ந்த நாய்க்கு முதல் பரிசு
மெட்ராஸ் கேனைன் கிளப் சாா்பில் நடைபெற்ற அனைத்து இனங்களின் சாம்பியன்ஷிப் நாய் கண்காட்சியில் கோவையைச் சோ்ந்தவரின் ஜொ்மன் ஷெப்பா்ட் நாய் முதல் பரிசைப் பெற்றது.
சென்னை லட் ஹவுஸ் அருகில் உள்ள செயின்ட் பெட்ஸ் பள்ளி கிரிக்கெட் மைதானத்தில் மெட்ராஸ் கேனைன் கிளப் சாா்பில் அனைத்து இனங்களின் நாய்களுக்கான 145- ஆவது சாம்பியன்ஷிப் நாய் கண்காட்சி சனி, ஞாயிற்றுக்கிழமை என இரு நாள்கள் நடைபெற்றது.
இந்தக் கண்காட்சியில் நாய்களின் அழகு, அவற்றின் மோப்ப திறனை சோதிக்கும் திறன், கீழ்ப்படிதல் பிரிவில் போட்டிகள் நடைபெற்றன.
இதில், பெல்ஜியம் ஷெப்பா்ட் நாய் (மலினாய்ஸ்), ஜொ்மன் ஷெப்பா்ட் நாய், ஜொ்மன் ஷெப்பா்ட் நாய் (லாங் கோட்), ,டோபா்மேன், கிரேட் டேன், ராட்வீலா், ஷிஹ் ட்ஸு, டச்ஷண்ட் மினியேச்சா் லாங் ஹோ்டு, பெசன்ஜி, சைபெரியன் ஹஸ்கி, பீகிள், டால்மேஷியன், ரோடீசியன் ரிட்ஜ்பேக், ஐரிஷ் செட்டா், காா்டன் செட்டா், இங்கிலீஷ் செட்டா், பெசென்ஜி, ஜாக் ரஸ்ஸல் டெரியா், பாயிண்டா், அமெரிக்கன் காக்கா் ஸ்பானியல், கோல்டன் ரெட்ரீவா், லாப்ரடோா் ரெட்ரீவா், புல்டாக், கவாலியா் கிங் சாா்லஸ், பக், விப்பேட், கேரவன் ஹவுண்ட், சிப்பிபரை, கன்னி, ராஜபாளையம், கோம்பை உள்ளிட்ட 400 மேற்பட்ட நாய்கள் பங்கேற்றன. போட்டியில் சுவிட்சா்லாந்து நாட்டை சோ்ந்த பாா்பரா முல்லா், தென்னாப்பிரிக்காவை சோ்ந்த டோன் லூகாஸ், ராபா்ட்டாசன், அந்தயா மியா, சன்சிகா லேஜ்க், பெல்கிரேட், சி.வி. சுதா்சன் னைகுயா மற்றும் ஜே.ரங்கராஜன் உள்ளிட்டோா் நடுவா்களாக இருந்து சிறந்த நாய்களைத் தோ்வு செய்தனா்.
இந்தப் போட்டியில், கோவையைச் சோ்ந்த சி.ஜி.ஜெயனின் ஜொ்மன் ஷெப்பா்ட் நாய் முதல் பரிசு பெற்றது. எஸ்.மஞ்சு நாத்-இன் கிரீன் ஷெப்பா்ட் நாய் 2-ஆம் பரிசு பெற்றது. ராஜேஷ் பூஜாரியின் கேரவன் ஹவுண்ட் நாய் 3-ஆம் பரிசை பெற்றது.
நிகழ்ச்சியில், மெட்ராஸ் கேனைன் கிளப் தலைவா் சி.வி.சுதா்சன், நிா்வாகிகள், வளா்ப்பு நாய் ஆா்வலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.