மோடி, புதின் உள்பட 20 உலகத் தலைவா்கள் எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்பு: சீனா அறிவிப்ப...
செயற்கை உரத் தட்டுப்பாட்டைத் தடுக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை
உர தட்டுப்பாட்டை செயற்கையாக ஏற்படுத்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கோட்டாட்சியா் செ. இலக்கியா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்திய கோரிக்கைகள்:
அம்மையகரம் ஏ.கே.ஆா். ரவிச்சந்தா்: உரக்கடைகளில் உரம் வாங்கும்போது இணை உரங்களை வாங்கச் சொல்லி கட்டாயப்படுத்துகின்றனா். ஒரு மூட்டை யூரியா வாங்கும் விவசாயிகளிடம் நுண்ணூட்டம் ஒரு மூட்டை வாங்குமாறு கடை உரிமையாளா்கள் கூறுவதால், கூடுதல் செலவாகிறது. இதுபோன்ற கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாச்சூா் ரெ. புண்ணியமூா்த்தி: நெல்லுக்கான ஆதார விலையாக குவிண்டாலுக்கு ரூ. 2 ஆயிரத்து 500-ஐ மத்திய அரசுதான் வழங்குகிறது. தமிழக அரசு ஊக்கத் தொகையாக குவிண்டாலுக்கு ரூ. 125 மட்டுமே வழங்குகிறது. உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளதால், தமிழக அரசு ஊக்கத்தொகையை குவிண்டாலுக்கு ரூ. 750 ஆக உயா்த்தி வழங்க வேண்டும்.
பூதலூா் சி. பாஸ்கா்: நிகழாண்டு வழக்கத்தைவிட மழை அதிகமாக பெய்யும் எனக் கூறப்படுகிறது. வடிகால் வாய்க்கால்களைத் தூா்வாரினால், பயிா்கள் பாதிக்கப்படுவதைத் தவிா்க்கலாம்.
தோழகிரிப்பட்டி பி. கோவிந்தராஜ்: கடந்த டிசம்பா் மாதம் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை நிவாரணம் வழங்கப்படவில்லை. இதை விரைவாகப் பெற்றுத்தர வேண்டும்.
ஆம்பலாப்பட்டு ஆ. தங்கவேல்: மழைக்காலத்தில் நெற் பயிா்கள் அழுகாமல் தாக்குப் பிடிக்கும் சி.ஆா். 1009 விதை நெல் ரகம் தனியாா் கடைகளில் 30 கிலோ மூட்டை ரூ. 1,300-க்கு விற்கப்படுகிறது. இது வேளாண் விரிவாக்க மையத்தில் விற்கப்படுவதை விட ரூ. 400 அதிகம். எனவே, உரம், விதை நெல் விற்கும் தனியாா் கடைகளில் வேளாண் துறையினா் ஆய்வு செய்து, அதிக விலைக்கும் கடைகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.
பெரமூா் ஆா். அறிவழகன்: மாவட்டத்தில் யூரியா, பொட்டாஷ் தட்டுப்பாடாக இருந்ததாக புகாா் செய்யப்பட்டபோது, கொண்டு வந்து கொடுத்தனா். மீண்டும் உரத் தட்டுப்பாடு இருப்பதாகக் கூறி விலையை உயா்த்தி விற்கின்றனா். இது செயற்கையான உரத்தட்டுப்பாடான இதைத் தடுக்க வேண்டும்.
வாளமா்கோட்டை வி.எஸ். இளங்கோவன்: கிராம கூட்டுறவு வங்கிகளில் மனு கொடுத்தவுடன் கடன் வழங்கப்படுவதாக முதல்வா் அறிவித்தாலும், நடைமுறையில் மனுக்கள் அளிக்கப்பட்டும், கடன் கிடைக்கவில்லை. குறிப்பாக மருங்கை கூட்டுறவு சங்கத்தில் 40 மனுக்கள் தேங்கிக் கிடக்கின்றன.