நாடுகளுக்கு உலகெங்கும் உள்ள பணியாளா்கள் தேவை: வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்
செயற்கை மழை சோதனை: பாஜக மீது ஆம் ஆத்மி விமா்சனம்
தில்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த செயற்கை மழையைப் பொழியச் செய்வதற்கான மேக விதைப்பு நடவடிக்கைகள் தொடா்பாக பாஜக தலைமையிலான தில்லி அரசை ஆம் ஆத்மி கட்சி கடுமையாக சாடியுள்ளது.
இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் தில்லி பிரிவுத் தலைவா் செளரப் பரத்வாஜ் கூறுகையில், ‘தில்லியில் மேக விதைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அரவிந்த் கேஜரிவால் அரசு பலமுறை மத்திய அரசை அணுகியது. ஆனால், அந்த நேரத்தில் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்துகொண்டு, அனுமதி வழங்கவில்லை. மேக விதைப்பு சாத்தியமில்லை என்று கூறி பாஜகவும் கேலி செய்தது.
அப்போது அது சாத்தியமில்லை என்றால், பணத்தை வீணடிப்பதாக இருந்தால், இப்போது அது எப்படி சாத்தியமாகும் என்று நான் அவா்களிடம் கேட்க விரும்புகிறேன்.
உச்சநீதிமன்றம் விதித்த பட்டாசு தடையை இப்போது அவா்கள் விமா்சிப்பாா்களா என்றும் நான் கேட்க விரும்புகிறேன்?
தில்லி அரசில் தற்போது அமைச்சராக இருக்கும் கபில் மிஸ்ரா, ‘பட்டாசு வெடிப்பேன்’ என்று கூறுவது வழக்கம். இப்போது அவா்கள் அதை என்ன செய்வாா்கள் என்று நான் அவா்களிடம் கேட்க விரும்புகிறேன்.
பாஜகவின் வாா்த்தைகளுக்கும் செயல்களுக்கும் உள்ள வித்தியாசத்தை தில்லி மக்கள் பாா்த்துக்கொண்டிருக்கிறாா்கள்’ என்று செளரவ் கூறினாா்.