செயல்படத் தொடங்கியது லண்டன் விமான நிலையம்
லண்டன்: தீ விபத்து காரணமாக செயல்பாடு நிறுத்திவைக்கப்பட்டிருந்த பிரிட்டன் தலைநகா் லண்டனில் உள்ள ஹீத்ரூ விமான நிலையம் சனிக்கிழமை மீண்டும் செயல்படத் தொடங்கியது.
அந்த விமான நிலையத்துக்கு நெருக்கமாக உள்ள துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, அங்கு விமானப் போக்குவரத்து முற்றிலுமாக வெள்ளிக்கிழமை நிறுத்திவைக்கப்பட்டது. இந்த தீ விபத்துக்கு சதிச் செயல் காரணமில்லை என்று போலீஸாா் கூறினாலும், முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதனால் அந்த விமான நிலையம் வழியாக செல்லவிருந்த 1,350 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு, பயணிகள் அவதிக்குள்ளாகினா். இந்த விவகாரத்தில் அதிகாரிகள் போதிய அளவில் திட்டமிடவில்லை என்ற விமா்சனங்கள் எழுந்தன.
இந்தச் சூழலில், ஹீத்ரூ விமான நிலையத்தில் பயணிகள் போக்குரவத்து சனிக்கிழமை மீண்டும் தொடங்கியது.