வர்ணனையில் இனவெறி கருத்து! சிக்கலில் ஹர்பஜன் சிங்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சரை இனவெறி கருத்துகளால் விமர்சித்த இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு கண்டனம் எழுந்துள்ளது.
இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார். இதனிடையே, ஐபிஎல் போட்டிகளில் வர்ணனையாளராகவும் செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில், ஹைதராபாத் திடலில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் நடந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியை ஹர்பஜன் சிங் வர்ணனை செய்தார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, 20 ஓவர்களில் 286 ரன்கள் குவித்தது. ராஜஸ்தானின் நட்சத்திர வீரரும் இங்கிலாந்தைச் சேர்ந்தவருமான ஜோஃப்ரா ஆர்ச்சர் 4 ஓவர்களில் 76 ரன்களை வழங்கி மோசமான சாதனையைப் படைத்தார்.
இதுகுறித்து வர்ணனையில் ஈடுபட்டிருந்த ஹர்பஜன் சிங் பேசுகையில், “லண்டனின் கருப்பு நிற டேக்ஸிகளின் மீட்டர்களைப் போல, ஜோஃப்ரா ஆர்ச்சரின் மீட்டர்களும் (ரன்கள்) அதிகளவில் இருக்கிறது” என்று விமர்சனம் செய்தார்.
இந்திய அணிக்காக விளையாடிய காலத்தில், வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது, தான் இனவெறியால் பாதிக்கப்பட்டதாக ஹர்பஜன் சிங் ஒருமுறை பேட்டியில் தெரிவித்திருந்தார்.
அந்த கருத்துகளை பகிர்ந்து தற்போது ஹர்பஜன் சிங்கே இனவெறி கருத்துகளை தெரிவித்ததாக பதிவிட்டு கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.
மேலும், ஐபிஎல் வர்ணனையில் இருந்து ஹர்பஜன் சிங்கை தடை செய்ய வேண்டும் என்றும் சிலர் கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க : ஐபிஎல் வரலாற்றில் மிக மோசமான சாதனையை நிகழ்த்திய ஆர்ச்சர்!
நேற்றைய போட்டியில் ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.