விதைப் பண்ணையில் விதிமீறல்? தானிய லாரியை மறித்து மக்கள் போராட்டம்
மதுரை: ``இந்த நிமிடம் வரை திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்'' - த.வா.க வேல்முருகன் சொல்வது என்ன?
நாம் தமிழர் கட்சியில் இணை ஒருங்கிணைப்பாளராக இருந்து கடந்த ஆண்டு வெளியேறிய வெற்றிக்குமரன் தன்னுடைய அமைப்பை தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைக்கும் நிகழ்ச்சி மதுரையில் நடந்தது.
அதில் கலந்துகொள்ள வந்திருந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களிடம் பேசும்போது, "தமிழகத்தில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த நிமிடம் வரை நாங்கள் திமுக தலைமையிலான கூட்டணியில்தான் இடம் பெற்றிருக்கிறோம். இனி தேர்தல் தேதி அறிவித்த பிறகு செயற்குழு, பொதுக்குழு கூடி நிலைபாட்டை முடிவு செய்வோம். அரசியல் நிலவரங்களுக்கு ஏற்றவாறு ஜனநாயக ரீதியான முடிவை அறிவிப்போம்.

கூட்டணியை விட்டு வெளியே போகிறோம் என்று நான் அறிவிக்கவில்லை, சட்டமன்றத்தில் மக்கள் பிரச்னையை எடுத்துரைக்கும்போது அது திமுகவுக்கோ, கூட்டணி தலைவருக்கோ சங்கடம் ஏற்பட்டால் அவர்கள் எடுக்கும் முடிவை நான் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வேன் என்றுதான் அறிவித்திருந்தேன்.
மனித குலத்திற்கு எதிரான பாசிச பாஜக-வுக்கு எதிரான திமுக தலைமையிலான கூட்டணியில் இப்போது வரை இடம் பெற்றிருக்கிறேன். அதே நேரத்தில் ஈழத்தில் எமது மக்களை கொன்று குவித்த சிங்கள பௌத்த பேரினவாத அரசுக்கு ஆயுதம் தந்த காங்கிரசோடு எந்த விதத்திலும் உடன்பாடு இல்லை. நாடாளுமன்றத் தேர்தலின்போது கை சின்னத்திற்கு வாக்கு கேட்கவில்லை.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கஞ்சா உள்ளிட்ட போதை குற்றங்களும், எல்லாவித குற்றங்களும் நடைபெறுகிறது. அரசே நடத்துகிற மதுக் கடைகள் மூலம் இளைய தலைமுறையினர் பாதிப்புகள் பற்றி கவலை கொள்ளாமல் உள்ளனர்.
தமிழகத்தில் நடைபெறும் பல கொலை வழக்குகளில் மாணவர்கள் கைதாகிறார்கள். இதனை மட்டுப்படுத்த வேண்டும். பாலியல் குற்றத்தில் ஈடுபடுகின்றவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகளை தடுக்க காவல்துறை இயக்குநரை சந்தித்து முறையிட்டேன். அதையே சட்டமன்றத்தில் தீர்மானமாக கொண்டு வந்தேன்.

சமரசம் இல்லாமல் போராட்டம்
தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர், பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் தமிழ் மொழி, தமிழர்களின் வாழ்வுரிமை சிக்கல்களிலும், முல்லைப் பெரியாறு, பாலாறு, மேகதாது அணை கட்டுவது, பரந்தூர் விமான நிலையம் என பல பிரச்னைகளில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்துள்ளேன்.
வலையடி குப்பத்தில் சிபிஎம் மாநில செயலாளர் பேட்டி கொடுத்தபோது காவல்துறையினர் அத்துமீறலில் ஈடுபட்டு கைது செய்துள்ளனர். நான் சமரசம் இல்லாமல் போராடுகிற மக்கள் பக்கம் நிற்பேன்.
தமிழில் அர்ச்சனை
மருதமலையில் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி துண்டறிக்கை கொடுத்தபோது பெண்கள், இளைஞர்களை காவல்துறையினர் அராஜகமான முறையில் கைது செய்ததை வன்மையாக கண்டிக்கிறேன்.
மருதமலையில் குடமுழுக்கு தமிழில் நடத்தப்பட வேண்டும் என்ற கவன ஈர்ப்பு தீர்மானத்தை பேரவைத்தலைவர் அலுவலகத்தில் தந்துவிட்டு அமைச்சர் சேகர்பாபுவை சந்தித்து கூறியதற்கு முடியவே முடியாது என்றவர், தமிழ்நாட்டு மக்கள் யாரும் தமிழில் அர்ச்சனை செய்யுங்கள் என கேட்கவில்லை, தமிழ் தேசியம் பேசுகிற நீங்கள்தான் தமிழ் என அரசியல் செய்கிறீர்கள் என்றார், அதனால் வாக்குவாதம் ஏற்பட்டது.

திமுக உடன் வாக்குவாதம் ஏன்?
தமிழர்களுக்கான வேலை வாய்ப்பு, சாதிவாரி கணக்கெடுப்பு, ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை குறித்து பேசினேன். அதற்கு முதலமைச்சர் உள்பட் அமைச்சர்கள் பதில் சொல்லாமல் இருந்ததால் ஆதாரத்தை எடுத்து காண்பித்தேன். ஆந்திராவில் அனைத்து பள்ளிகளிலும் தெலுங்கு கட்டாயம் என சொல்லி இருப்பதை போன்று இங்கும் நடைமுறைப்படுத்துங்கள் என்று சொல்லி ஆதாரத்தை காட்டியதால் சேகர்பாபுவுக்கு கோபம் வந்து ஒருமையில் பேசினார், அதனால் வாக்குவாதம் ஏற்பட்டது.
சட்டப்பேரவைக்கு ஏன் செல்லவில்லை?
சட்டமன்றத்தில் ஆக்கப்பூர்வமான அறிவுப்பூர்வமான விஷயங்களை வேல்முருகன் சொல்கிறார். அறையில் இருக்கும்போது அவருடைய பேச்சை கேட்பேன் என்று அவர் சமாதானம் சொல்வது போல பேசினார் அதெல்லாம் வெளியில் வரவில்லை. ஆனால், வேல்முருகன் இப்படி செய்யக்கூடாது என்ற அந்த வார்த்தை மட்டும் வெளியில் வந்தது. கூட்டணித் கட்சித் தலைவரை பார்த்து இப்படி சொல்லிவிட்டார் என்பது மன வருத்தம், அதனால் சட்டப்பேரவைக்கு நான் செல்லவில்லை
`மண்ணுக்கும் மக்களுக்கும் நல்லது செய்கிறேன்'
கூட்டணியிலிருந்து வெளியே வந்து விட்டால் ஒத்த சீட்டை வைத்து என்ன பண்ணுவீர்கள் என்று பலரும் கேட்கிறார்கள். தமிழ்நாட்டில் மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி, முக்கிய நகரங்களில் பொறியியல் கல்லூரிகள், லாட்டரி ஒழிப்பு, மணல் குவாரிகள் அரசுடமையாக்கியது, மழைநீர் சேகரிப்பு திட்டம், மெட்ரோ ரயில் என ஏராளமான தீர்மானங்களை, ஒத்த எம்எல்ஏ என்ற பதவியை வைத்து சட்டபேரவையில் போராடி வாதாடி இவைகளை சட்டமாக்கி ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்கு நன்மை செய்துள்ளேன். இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் நல்லது செய்கிறேன்

த.வெ.க உடன் கூட்டணியா?
தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி குறித்து தனிப்பட்ட முறையில் நான் முடிவு செய்ய முடியாது. திமுகவில் கூட்டணியில் தொடர்வதாக இருந்தாலும் வேறு ஒரு கட்சியில் கூட்டணியாக இருந்தாலும் தலைவர்களோடு கலந்து பேசி ஜனநாயக ரீதியான முடிவை எடுத்து அறிவிப்பு செய்வோம் அதையெல்லாம் தேர்தல் வரும்போது வெளிப்படைத்தன்மையோடு பேசுவோம். தமிழகம் முழுவதிலும் பயணம் செய்து இணைப்பு விழாக்கள் நடத்தி தினமும் ஆயிரக்கணக்கானோர் இளைஞர்களை எங்கள் கட்சியில் சேர்த்துக் கொண்டிருக்கிறோம்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் மண்ணுக்கான மக்களுக்கான மொழிக்கான இனத்திற்கான சாதி மத எல்லைகளைக் கடந்து அனைத்து மக்களுக்குமான வாழ்வுரிமைக்கான அரசியல் கட்சியாக வளரும்" என்றார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
