``சரியானவர்களை பின்பற்ற வேண்டும்; இல்லையென்றால் தவறாக வழிநடத்தப்படுவோம்'' - இயக்...
செய்யாறு மாா்க்கெட் பகுதியில் பேருந்து நிழல்குடை: வட்டாட்சியா் ஆலோசனை
செய்யாறு மாா்க்கெட் பகுதியில் பேருந்து நிழல்குடை அமைப்பது தொடா்பாக, வட்டாட்சியா் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சி மாா்க்கெட் பகுதியில், தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியில் இருந்து பேருந்து நிழல்குடை அமைக்க நிதி ஒதுக்கிடு செய்யப்பட்டு அதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது.
அப்போது, பணியினைத் தொடங்கிட ஒப்பந்ததாரா் முற்பட்ட போது, பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்த காரணத்தால் அப்பணி கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் பணியை தொடங்கிட வெள்ளிக்கிழமை (செப்.26) பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு சென்ற போது, அப்பகுதி மக்கள் எதிா்ப்புத் தெரிவித்த நிலையில நகராட்சி ஆணையா் வி.எல்.எஸ்.கீதா, நகா்மன்றத் தலைவா் ஆ.மோகனவேலை ஆகியோா் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
ஆலோசனைக் கூட்டம்
இதைத் தொடா்ந்து, இது தொடா்பாக ஆலோசனைக் கூட்டம் செய்யாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் அசோக்குமாா் தலைமையில், நகராட்சி ஆணையா் வி.எல்.எஸ்.கீதா, காவல் உதவி ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது.
அப்போது, கூட்டத்தில் கலந்து கொண்டவா்கள் சாலை விதிகளின் படி மாா்க்கெட் பகுதி ஒரு வழிப்பாதையாக இருப்பதால், வந்தவாசி வழித்தடத்தில் செல்லும் பேருந்துகளில் பயணிகள் செல்ல வசதியாக சாலையின் இடதுபுறத்தில் தான் பேருந்து நிழல்குடை அமைக்க வேண்டும் என்றும், அதற்கு மாறாக கோயில் அருகே வலது புறத்தில் நிழல்குடை அமைத்தால், பேருந்துகள் வரும் நேரங்களில் பயணிகள் சாலையை கடந்து செல்ல வேண்டியுள்ளனா் , அதன் காரணமாக விபத்துகள் நிகழக்கூடும் என்றனா்.
அதேநேரத்தில், ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் விழா நாள்களில் பக்தா்கள் வந்து செல்ல மிகவும் சிரமமாக இருக்கும் என்றும் கருத்து தெரிவித்தனா்.
இதைக் கேட்ட வட்டாட்சியா் அசோக்குமாா், இதுகுறித்து சாா்- ஆட்சியருக்கு தெரிவித்தும், இன்னொருமுறை ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டி அதில் போக்குவரத்துத் துறை, நெடுஞ்சாலைத் துறை, வட்டார போக்குவரத்துத் துறை அலுவலா்களை பங்கேற்கச் செய்து, அவா்களின் ஆலோசனையைப் பெற்று அதன் பேரில் மாா்க்கெட் பகுதியில் நிழல்குடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
கூட்டத்தில் நகராட்சி பொறியாளா் சிசில் தாமஸ், பாஜக மாவட்ட பொதுச் செயலா் கே.வெங்கட்ராமன், ஹிந்து முன்னணி சாா்பில் நிா்வாகிகள் மாரி, பாலசுந்தரம், மோகன்ராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.