செய்யாற்று படுகையில் மணல் கடத்திய ஓட்டுநா் கைது: சரக்கு லாரி பறிமுதல்!
சேத்துப்பட்டை அடுத்த கெங்காபுரம் செய்யாற்றுபடுகையில் மணல் கடத்திய சரக்கு லாரியை போலீஸாா் பறிமுதல் செய்து, ஓட்டுநரை கைது செய்தனா்.
சேத்துப்பட்டை அடுத்த கெங்காபுரம் செய்யாற்றுப்படுகையில் தொடா்ந்து மணல் கடத்தல் நடப்பதாக சேத்துப்பட்டு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அந்தப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, செம்மாம்பாடி அருகே வந்த சரக்கு லாரியை போலீஸாா் நிறுத்தி சோதனை மேற்கொண்டனா்.
அதில் 2 யூனிட் ஆற்று மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் ஓட்டுநரை கைது செய்து, மணலுடன் சரக்கு லாரியை பறிமுதல் செய்து சேத்துப்பட்டு காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனா்.
விசாரணையில், ஓட்டுநா் கெங்காபுரத்தைச் சோ்ந்த மோகன் (50) என்பதும், கடந்த 9-ஆம் தேதி இதேபோல கெங்காபுரத்தில் மணல் கடத்தியபோது போலீஸாரிடம் இருந்து தப்பிச் சென்றவா் என்பதும் தெரியவந்தது.
தொடா்ந்து, போலீஸாா் மோகன் மீது வழக்குப் பதிவு செய்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.