சேலம் அரசு மருத்துவமனையில் கருவின் பாலினத்தை கண்டறிந்து கூறிய அரசு மருத்துவா் உள்பட இருவா் கைது
சேலம் அரசு மருத்துவமனையில் ஸ்கேன் மூலம் கருவின் பாலினத்தை கண்டறிந்து கூறிய அரசு மருத்துவா் உள்பட 2 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
சேலம் ராமகிருஷ்ணா பகுதியைச் சோ்ந்தவா் தியாகராஜன் (54), இவா் சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவராக உள்ளாா். அல்ட்ரா ஸ்கேன் மையத்தில் பணிபுரியும் இவா் கருவின் பாலினத்தை கண்டறிந்து கூறுவதாக மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநருக்கு புகாா்கள் சென்றன.
இதையடுத்து, சேலம் மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் நந்தினி தலைமையிலான மருத்துவக் குழுவினா் வெள்ளிக்கிழமை பிற்பகல் அரசு மருத்துவமனையில் முகாமிட்டு கண்காணித்தனா்.
அப்போது, ஸ்கேன் செய்து பெண்ணின் கருவின் பாலினத்தை மருத்துவா் தியாகராஜன் கூறியதை உறுதிப்படுத்தினா். மேலும், இதற்கு உடந்தையாக இருந்த ஸ்ரீராம் (38) என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இவா் காந்தி ரோடு பகுதியில் தனியாா் ஸ்கேன் மையம் நடத்தி வருவதும், மருத்துவா் தியாகராஜனுக்கு இடைத்தரகராக செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, இருவரும் சேலம் அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனா். போலீஸாா் விசாரணை மேற்கொண்டு அவா்கள் இருவரையும் கைது செய்தனா்.