சைஃப் அலிகான் வழக்கில் யாரையும் கைது செய்யவில்லை: காவல் துறை
நடிகர் சைஃப் அலிகானைக் கத்தியால் குத்திய வழக்கில் இதுவரை யாரையும் கைது செய்யப்படவில்லை என்று மும்பை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானின் வீட்டுக்குள் ஊடுருவிய மர்மநபர், அவரை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வீட்டில் கொள்ளையடிக்கும் முயற்சியில் நடந்ததாக கூறப்படும் இத்தாக்குதலில் சைஃப் அலிகான் ஆறு முறை குத்தப்பட்டு, பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருடைய தண்டுவடத்தில் சிக்கியிருந்த 2.5 அங்குல நீளமுள்ள கத்தியின் உடைந்த பகுதி, அவசர அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. அவர் அபாய கட்டத்தைக் கடந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சைஃப் அலிகான் மீதான தாக்குதல் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ள காவல்துறையினர், அவரை கத்தியால் குத்திய நபரை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
முதல்கட்ட விசாரணையின்படி, கொள்ளையடிக்கும் நோக்கில் மர்மநபர் ஒருவர் முன்பே வீட்டுக்குள் ஊடுருவி அங்கு பதுங்கி இருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த நபரை வீட்டுப் பணிப்பெண்தான் முதலில் பார்த்து சப்தமிட்டுள்ளார்.
அதன் பிறகு ஏற்பட்ட கைகலப்பில், சைஃப் அலிகானை அந்த நபர் கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு, படிக்கட்டு வழியாக தப்பிச் சென்றுள்ளார். இச்சம்பவத்தில் வீட்டு பணிப்பெண்ணும் லேசான காயமடைந்தார்.
சைஃப் அலிகான் வீட்டு பணிப்பெண் அளித்த புகாரின் பேரில் காவல்துறையில் வழக்குப்பதிவு செய்தனர். பாரதிய நியாய சம்ஹிதா சட்டத்தின் 311 (மரணம் அல்லது படுகாயம் விளைவிக்கும் முயற்சியுடன் கூடிய கொள்ளை), 331 (4) (வீட்டை உடைத்துப் புகுதல் அல்லது அத்துமீறுதல்) உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அடுக்குமாடி குடியிருப்பின் சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வழக்கில் சந்தேகிக்கும் நபர் ஒருவரை மும்பை காவல் துறையினர் கைது செய்ததாக முன்னதாக சமூக ஊடங்களில் தகவல் வெளியானது.
இந்த நிலையில், மும்பை காவல் துறையினர் இதனை மறுத்து நடிகர் சைஃப் அலிகான் வழக்கு தொடர்பாக இதுவரை யாரையும் கைது செய்யவில்லை என்று தெரிவித்துள்ளது.