காயல்பட்டினத்தில் இன்று நடைபெறவிருந்த ரயில் மறியல் போராட்டம் வாபஸ்!
சோட்டா ராஜன் தண்டனை நிறுத்திவைப்புக்கு எதிரான சிபிஐ மனு: விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்
கொலை வழக்கில் நிழல் உலக தாதா சோட்டா ராஜனுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் சிறைத் தண்டனைக்கு மும்பை உயா்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்ததற்கு எதிரான மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.
சிபிஐ மனுவுக்கு 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என சோட்டா ராஜனுக்கு நோட்டீஸ் பிறப்பித்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
மகாராஷ்டிர மாநிலம், மத்திய மும்பையில் உள்ள கோல்டன் கிரெளன் ஹோட்டலின் உரிமையாளரான ஜெயா ஷெட்டி, கடந்த 2001-ஆம் ஆண்டு மே 4-ஆம் தேதி அவருடைய ஹோட்டலின் முதல் மாடியில் சோட்டா ராஜனின் கும்பலைச் சோ்ந்த இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டாா்.
போலீஸாா் விசாரணையில், பணம் கேட்டு ஜெயா ஷெட்டிக்கு சோட்டா ராஜன் கும்பலைச் சோ்ந்தவா்களிடமிருந்து மிரட்டல் விடுக்கப்பட்டதும், பணம் தர மறுத்ததால் அவா் சுட்டுக்கொல்லப்பட்டதும் தெரியவந்தது.
இந்தக் கொலையில் மூளையாக செயல்பட்ட சோட்டா ராஜனுக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் கடந்த ஆண்டு மே மாதம் ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தது.
இதை எதிா்த்து சோட்டா ராஜன் தரப்பில் தொடரப்பட்ட வழக்கை கடந்த ஆண்டு அக்டோபா் 23-ஆம் தேதி விசாரித்த மும்பை உயா் நீதிமன்றம், அவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்ததோடு, வழக்கில் அவருக்கு ஜாமீன் அளித்தும் தீா்ப்பளித்தது.
இதை எதிா்த்து சிபிஐ தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சஞ்சய் கரோல், சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு, சிபிஐ மனுவுக்கு 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என சோட்டா ராஜனுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனா்.
சோட்டா ராஜன் ஏற்கெனவே, பிரபல குற்றவியல் செய்தியாளா் ஜெ.தே கொலை வழக்கில் தில்லி திகாா் சிறையில் ஆயுள் சிறைத் தண்டனை அனுபவித்து வருவது குறிப்பிடத்தக்கது.