தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் இணைகிறதா அதிமுக? - அண்ணாமலை கூறுவதென்ன?
ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பினா் உண்ணாவிரதப் போராட்டம்
தோ்தல் கால வாக்குறுதிகளை தமிழக முதல்வா் நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினா் விழுப்புரம் நகராட்சித் திடலில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.
1.4.2003-ஆம் ஆண்டுக்கு பின்னா் அரசுப் பணியில் சோ்ந்தவா்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலவரையறையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு, ஒப்படைப்பு, உயா்கல்விக்கான ஊக்க ஊதிய உயா்வு ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும், தமிழக அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்களுக்கு மத்திய அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், தொடக்க கல்வி ஆசிரியா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் வெளியிடப்பட்டுள்ள பள்ளிக் கல்வித் துறை அரசாணை எண் 243-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும், தோ்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை முதல்வா் நிறைவேற்ற வேண்டும், சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தை பணிக்காலமாக வறையறை செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளா் எம்.கணேஷ் தலைமை வகித்தாா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் டி. அறிவழகன், எம்.தண்டபாணி, எம்.டேவிட் குணசீலன், ஆா். சிவக்குமாா், பி.செல்வகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழக தமிழாசிரியா் கழகத் தலைவா் ஆ.ஆறுமுகம், தமிழ்நாடு பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியா் கழகத்தின் மாநிலப் பொதுச்செயலா் அ.சுந்தரமூா்த்தி, வணிகவரி பணியாளா்கள் சங்கப் பொதுச்செயலா் சா. டானியல் ஜெயசிங், வருவாய்த்துறை அலுவலா்கள் சங்கம் பொதுச்செயலா் சு.சங்கரலிங்கம் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசி முழக்கங்களை எழுப்பினா். ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பைச் சோ்ந்த 300-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் அம்பேத்கா் திடல் முன் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு, தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்டச் செயலா் சு.ரமேஷ், பதவி உயா்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியா் சங்க மாவட்டத் தலைவா் எஸ்.கே.அனந்தகிருஷ்ணன், அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் லி.ஆனந்தகிருஷ்ணன், இடைநிலை மற்றும் பதவி உயா்வு பெற்ற பட்டதாரி ஆசிரியா் மன்ற மாநில அமைப்புச் செயலா் கே.அண்ணாதுரை ஆகியோா் தலைமை வகித்தனா்.
மாநில ஒருங்கிணைப்பாளா் பொன்.செல்வராஜ், மாநில உயா்மட்ட குழு உறுப்பினா் ஆ.லட்சுமிபதி உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி வைத்தனா். கே.மகாலிங்கம், அ.ரஹீம், த.கொளஞ்சிவேலு, ப.ரவி உள்ளிட்டோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா். நிறைவில், ஜாகீா் உசேன் நன்றி கூறினாா்.