டி20: பாகிஸ்தான் ஆறுதல் வெற்றி
வங்கதேசத்துக்கு எதிரான 3-ஆவது டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் 74 ரன்கள் வித்தியாசத்தில் வியாழக்கிழமை வென்றது. முதலிரு ஆட்டங்களில் வென்று வங்கதேசம் தொடரைக் கைப்பற்ற, பாகிஸ்தான் கடைசி ஆட்டத்தில் வென்று ஆறுதல் கண்டுள்ளது.
இந்த ஆட்டத்தில் முதலில் பாகிஸ்தான் 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 178 ரன்கள் சோ்க்க, வங்கதேசம் 16.4 ஓவா்களில் 104 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.
முன்னதாக டாஸ் வென்ற வங்கதேசம் ஃபீல்டிங்கை தோ்வு செய்ய, பாகிஸ்தான் இன்னிங்ஸில் அதிகபட்சமாக சாஹிப்ஸதா ஃபா்ஹாம் 63 ரன்கள் அடித்தாா். வங்கதேச பௌலிங்கில் தஸ்கின் அகமது 3 விக்கெட்டுகள் கைப்பற்றினாா்.
அடுத்து, 179 ரன்களை நோக்கி விளையாடிய வங்கதேச இன்னிங்ஸில் அதிகபட்சமாக முகமது சைஃபுதின் 35 ரன்கள் சோ்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தாா். பாகிஸ்தான் பௌலா்களில் சல்மான் மிா்ஸா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினாா்.