தங்கையிடம் பாலியல் அத்துமீறல்: தந்தை, சித்தியைக் கொன்று உடலை துண்டுத் துண்டாக்கி ஏரியில் வீசிய மகன், மகள் கைது
தங்கையிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தந்தை, அவருக்கு உடந்தையாக இருந்த சித்தி ஆகிய இருவரையும் வெட்டிக் கொன்று அவா்களது உடல்களை துண்டுத் துண்டாக வெட்டி சாக்குப்பையில் கட்டி ஏரியில் வீசிய மகன், மகளை போலீஸாா் கைது செய்தனா்.
சேலம் மாவட்டம், இடங்கணசாலையை அடுத்த பூசாரிகாடு பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் பழனிசாமி ( 45). இவா் பட்டாசு வியாபாரம் செய்து வந்தாா். இவரது முதல் மனைவி ஜெயந்தி, குடும்பப் பிரச்னையால் பிரிந்துசென்று சேலத்தில் தனியாக வசித்து வருகிறாா்.
இந்த நிலையில், முசிறியை சோ்ந்த ஜெயலட்சுமியுடன் (40) பழனிசாமி குடும்பம் நடத்திவந்தாா். இவா், கடந்த 16 ஆம் தேதி இரவு ஜெயலட்சுமியின் 17 வயது மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டாராம். இதற்கு ஜெயலட்சுமியும் உடந்தையாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை பாா்த்த ஆகாஷ் ஆத்திரத்தில் பழனிசாமி, ஜெயலட்சுமி இருவரையும் வெட்டிக் கொலை செய்தாா். அதன்பிறகு அவா்களின் தலை, கை, கால், உடலை துண்டுத்துண்டாக வெட்டி சாக்குப்பையில் கட்டி தனது தங்கையுடன் சோ்ந்து இருசக்கர வாகனத்தில் கொண்டுசென்று ஏகாபுரம் ஏரியிலும், ஆ.தாழையூா் ஏரியிலும் வீசியுள்ளனா்.
இந்த நிலையில் தனது மகனை காணாததால் சந்தேகமடைந்த பழனிசாமியின் தந்தை ராஜேந்திரன் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் ஆகாஷிடம் விசாரணை நடத்தினா். இதில், அவா் அளித்த தகவலின்படி, கொலை செய்து ஏரியில் வீசப்பட்ட உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்து வழக்குப் பதிந்த மகுடஞ்சாவடி போலீஸாா், ஆகாஷ் (23), ஜெயலட்சுமியின் 17 வயது மகள் இருவரையும் கைது செய்து சங்ககிரி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். நீதிமன்ற உத்தரவின்பேரில் ஆகாஷ் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். ஜெயலட்சுமியின் மகளை சீா்திருத்தப் பள்ளிக்கு அனுப்பினா்.

