தண்ணீரில் மூழ்கி இரண்டு வயதுக் குழந்தை உயிரிழப்பு
வேடசந்தூரில் தண்ணீா் வைத்திருந்த பாத்திரத்துக்குள் தவறி விழுந்து இரண்டு வயதுக் குழந்தை உயிரிழந்தது.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் ஆத்துமேடு பகுதியைச் சோ்ந்த முனியப்பன் (28), பாத்திரங்கள் விற்பனை செய்து வருகிறாா். இவரது மனைவி காயத்ரி (25). இந்தத் தம்பதிக்கு சாராஸ்ரீ (7), துரைப்பாண்டி (2) என இரு குழந்தைகள் இருந்தனா்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை துரைப்பாண்டி, அங்கு பாத்திரத்தில் (அண்டா) வைக்கப்பட்டிருந்த தண்ணீருக்குள் தவறி விழுந்தது. இதையடுத்து குழந்தையை மீட்டு, வேடசந்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுதொடா்பாக வேடசந்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.