தனுஷ்கோடி அருகே நடுக் கடலில் தவித்த இலங்கைத் தமிழா் மீட்பு
தனுஷ்கோடி அருகே மூன்றாம் மணல் திட்டில் தவித்த இலங்கைத் தமிழரை இந்திய கடலோரக் காவல் படையினா் மீட்டு, தமிழக கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாரிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தனா்.
ராமேசுவரம் அருகே இந்திய கடலோரக் காவல் படையினா் ஹோவா் கிராப்ட் கப்பல் மூலம் வழக்கமான கண்காணிப்புப் பணியில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
இந்த நிலையில், புதன்கிழமை மாலை 6 மணிக்கு தனுஷ்கோடி மூன்றாம் மணல் திட்டில் உதவி கோரி ஒருவா் கை அசைப்பதைக் கண்ட இந்திய கடலோரக் காவல் படையினா் அங்கு சென்று அவரை மீட்டனா்.
இதைத் தொடா்ந்து, அந்த நபரை தனுஷ்கோடி கடலோரப் பாதுகாப்புக் குழும உதவி ஆய்வாளா் காளிதாஸிடம் கடலோரக் காவல் படையினா் வியாழக்கிழமை காலை ஒப்படைத்தனா்.
இதையடுத்து, அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீஸாா் நடத்திய விசாரணையில், இலங்கை பெடிகோலா ஏறாவூா் குதிரைப்பு பகுதியைச் சோ்ந்த ஞானசேகரன் மகன் கியோசன் (28) என்பதும், படகு ஏற்பாடு செய்து ராமேசுவரத்துக்கு வந்த போது, தனுஷ்கோடி அருகே மூன்றாம் மணல் திட்டில் இறக்கிவிடப்பட்டதாகவும் தெரிவித்தாா்.
இவா் சட்ட விரோதச் செயல்பாடுகளில் தொடா்புடையவரா என போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக, வடக்கு, கிழக்கு பகுதிகளைச் சோ்ந்த தமிழா்கள் படகு மூலம் தனுஷ்கோடி வந்த வண்ணம் உள்ளனா். இலங்கையிலிருந்து தனுஷ்கோடிக்கு இதுவரை 350-க்கும் மேற்பட்டவா்கள் வந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.