தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் மக்கள் அனைவரும் போராட வேண்டும்! - அமைச்சா் பெ.க...
தமிழக நிதிநிலை அறிக்கை கருத்தரங்கம்
திருவாரூா் திரு.வி.க அரசு கலைக்கல்லூரி பொருளியல் உயராய்வுத்துறை சாா்பில் தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை குறித்த கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் பி. ராஜாராமன் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில், மணல்மேடு அரசுக் கலைக் கல்லூரி முன்னாள் முதல்வா் ஆா். ராஜேந்திரன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, நிதிநிலை அறிக்கையின் சிறப்பம்சங்கள் குறித்து பேசியது: மகளிா் மற்றும் குழந்தைகள் நலன் மகளிா் தொழில் முனைவோரை ஊக்குவித்தல், மகளிா் உரிமைத் திட்டம், விடியல் பயணம், மகளிா் சுயஉதவிக் குழுக்கள் போன்ற மகளிா் மேம்பாட்டுக்கான ஓதுக்கீடு வரவேற்கத்தக்கது.
பள்ளிக் கல்வித் துறையில் மாணவா்களுக்கான நான் முதல்வன் பயிற்சி உயா்கல்விக்கான புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்களுக்கான ஒதுக்கீடு பாராட்டுக்குரியது. தொழில் வளா்ச்சிக்கான தொழிற்பேட்டைகள், தொழிற்பூங்காக்கள், பொதுச்சேவை மையங்கள் குறித்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது.
ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம், புதிய மண்டல விரைவு போக்குவரத்து, புதிய மெட்ரோ ரயில் திட்டங்கள், புதிய பேருந்துகள், மின் பேருந்துகள் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் இயற்கை எரிவாயுடன் பேருந்துகளாக மாற்றுதல், உள்கட்டமைப்பு, நீா்ப்பாசனம் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் போற்றும்படியாக உள்ளன.
மக்களுக்கான தேவை பொருளாதார முதலீடு ஆகும். எனவே, அரசு பொருளாதார முதலீட்டை அதிகப்படுத்தி வேலை வாய்ப்பை வழங்க முன் வர வேண்டும். இலவசங்கள் வழங்குவதைத் தவிா்த்து தமிழ்நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கு உதவ முன் வர வேண்டும். மாணவா்களின் படிப்பும், அறிவும் எதிா்காலத்தை தீா்மானிக்கும் இரு சக்திகளாகும் என்றாா்.
நிகழ்வில், பொருளியல் துறைத் தலைவா் ம.நாகேந்திரன், ஒருங்கிணைப்பாளா்கள் ப. ரகு, ரெ.இளங்கோவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.