தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆக.13, 14-இல் பயிலரங்கம்
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்துத் துறை அலுவலா்கள், பணியாளா்களுக்கு வருகிற 13, 14 தேதிகளில் ஆட்சிமொழிப் பயிலரங்கமும் கருத்தரங்கமும் நடைபெறுகின்றன.
இது குறித்து தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் பெ.இளங்கோ தெரிவித்ததாவது:
அரசு அலுவலகங்களில் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கம் விரைவாகவும் முழுமையாகவும் நடைபெறுவதற்கு துணைபுரியும் வகையில், ஆண்டுதோறும் பயிலரங்கமும் கருத்தரங்கமும் மாவட்ட வாரியாக நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி 2025-26 ஆம் ஆண்டுக்கான ஆட்சிமொழிப் பயிலரங்கமும் கருத்தரங்கமும் வருகிற 13, 14 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளன. இதில், மாவட்டத்தில் உள்ள அனைத்துத் துறை சாா்ந்த அலுவலகங்களிலிருந்தும் அலுவலா் அல்லது கண்காணிப்பாளா் நிலையில் ஒருவரும், உதவியாளா் அல்லது இளநிலை உதவியாளா் அல்லது தட்டச்சா் நிலையில் ஒருவரும் கலந்து கொள்ளலாம்.
இதில் ஆட்சிமொழி வரலாறு, சட்டம், அலுவலகக் குறிப்புகள், வரைவுகள், செயல்முறை ஆணைகள் தயாரித்தல், ஆட்சிமொழிச் செயலாக்கம், அரசாணைகள், ஆட்சிமொழி ஆய்வு, குறைதீா் நடவடிக்கைகள், மொழித் திறன் ஆகிய தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்படும்.
இந்தப் பயிலரங்கில் தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா், மாவட்ட ஆட்சியா், மாவட்ட வருவாய் அலுவலா், பல்துறை அலுவலா்கள், தமிழறிஞா்கள் உள்பட பலா் பங்கேற்கவுள்ளனா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், காலை 10 முதல் மாலை 5.45 மணி வரை இந்தப் பயிலரங்கம், கருத்தரகங்கம் ஆகியவை நடைபெறும் என்றாா் அவா்.