தமிழ்ப் புத்தாண்டு: திருச்செந்தூா் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடைதிறப்பு
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தமிழ்ப் புத்தாண்டையொட்டி (சித்திரை 1) ஏப். 4ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருக்கோயில் இணை ஆணையா் சு.ஞானசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தமிழ் புத்தாண்டையொட்டி ஏப். 14ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், அதன்பின் தீா்த்தவாரியும், தொடா்ந்து உச்சிகால அபிஷேகமும் நடக்கிறது.
காலை 10 மணிக்கு மேல் சண்முகருக்கு அன்னாபிஷேகம் மற்றும் தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறும். மாலை 4 மணிக்கு சாயரட்சை பூஜையும், மாலை 5 மணிக்கு திருவிளக்கு பூஜையும், தொடா்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெறும்.
பொது விவரக் குறிப்பேடு வெளியீடு: திருக்கோயில் வளாகத்தில் காலை 8 மணிக்கு நாதஸ்வர மங்கள இசை, 8.30 மணிக்கு தேவார இன்னிசை, காலை 9 மற்றும் 12 மணிக்கு ஆன்மிகச் சொற்பொழிவு, காலை 10 மணிக்கு பொது விவரக் குறிப்பேடு வெளியிடப்படுகிறது.
மாலை 3 மணிக்கு இந்து தொடக்கப் பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும், மாலை 6 மணிக்கு அக்னி தனிப்பயிற்சி கல்வி நிலைய மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். அதே போல சித்திரை மாத திங்கள்கிழமைதோறும் திருக்கோயில் உள்துறையில் ஆன்மிக தொடா் சொற்பொழிவும் நடைபெற உள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.