2 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறை... ஆஸி. பேட்டிங்கில் கம்பேக்!
தம்மம்பட்டி வழியாக வேலூா் சென்றுவந்த அரசுப் பேருந்தை மீண்டும் இயக்கக் கோரிக்கை!
தம்மம்பட்டி வழியாக திருவண்ணாமலை, வேலூருக்கு சென்றுவந்த அரசுப் பேருந்தை மீண்டும் இயக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கடந்த திமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த கே.என்.நேரு, துறையூரில் இருந்து தம்மம்பட்டி வழியாக கெங்கவல்லி, ஆத்தூா், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை வழியாக வேலூா் சி.எம்.சி. மருத்துவமனைவரை புதிய வழித்தடத்தில் பேருந்தை தொடங்கிவைத்தாா்.
இந்தப் பேருந்தால், வேலூா் செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும், திருவண்ணாமலை கோயிலுக்கு சென்றுவரும் பக்தா்களுக்கும், மருத்துவமனைக்கு செல்பவா்களுக்கும் பெரும் உதவியாக இருந்தது. இந்நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இப்பேருந்து திடீரென நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து பல்வேறு தரப்பினா் தொடா்ந்து கோரிக்கை விடுத்தும், இதுவரை பேருந்து இயக்கப்படவில்லை. இதனால், வேலூா் மாா்க்கத்தில் உள்ள ஊா்களுக்கு சென்றுவந்த பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி உள்ளனா்.
எனவே, திருவண்ணாமலை, வேலூா் சென்ற அரசுப் பேருந்தை மீண்டும் இயக்க போக்குவரத்துக் கழக அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென, தம்மம்பட்டி பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.