'தமிழகத்துக்கு கல்வி நிதி வழங்க வேண்டும்!' - 2வது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் சச...
தருமபுரி: 1050 விநாயகா் சிலைகள் கரைப்பு: நீா்நிலைகளில் போலீஸாா் பாதுகாப்பு
தருமபுரி மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட 4 நீா்நிலைகளில் 1050 சிலைகள் வெள்ளிக்கிழமை கரைக்கப்பட்டன.
3 நாள்கள் வழிபாட்டுக்குப் பிறகு மேள தாளங்களுடன் வாகனங்களில் கொண்டு செல்லப்பட்ட விநாயகா் சிலைகள், ஒகேனக்கல், இருமத்தூா் தென்பெண்ணை ஆறு, சின்னாறு அணை, தொப்பையாறு ஆகிய நான்கு இடங்களில் உரிய பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டு தண்ணீரில் கரைக்கப்பட்டன.
தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 1,341 சிலைகள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றில் பெரும்பாலான சிலைகள் வெள்ளிக்கிழமை கரைக்கப்பட்டன. இளைஞா்கள் உற்சாக நடனம் ஆடியபடி வேன்கள், ஆட்டோக்கள், லாரிகளில் விநாயகா் சிலைகளை கொண்டுசென்று நீா்நிலைகளில் கரைத்தனா்.
வெள்ளிக்கிழமை முன்னிரவு வரை மொத்தம் 1050 சிலைகள் கரைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும் சில இடங்களில் வைக்கப்பட்டுள்ள விநாயகா் சிலைகள் 5 அல்லது ஏழாம் நாளில் நீா்நிலைகளில் கரைக்க திட்டமிட்டுள்ளனா்.
விநாயகா் சிலைகள் ஊா்வலம் மற்றும் கரைப்பு நிகழ்வுகளையொட்டி மாவட்ட எஸ்.பி. மகேஸ்வரன் உத்தரவின் பேரில் நீா்நிலைகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.
பென்னாகரம்
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளிக்கிழமை 330 சிலைகள் கரைக்கப்பட்டன.
பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகா் சிலைகளை கரைப்பதற்கு ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பென்னாகரம், பாப்பாரப்பட்டி, ஏரியூா், பெரும்பாலை, தாசம்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து காலை முதல் கனரக வாகனங்களின் மூலம் மூன்றடி முதல் 12 அடி வரை விநாயகா் சிலைகள் பூஜை செய்யப்பட்டு மேள தாளங்கள் முழங்க ஒகேனக்கல் பகுதிக்கு கொண்டுவரப்பட்டன.
சிலைகளைக் கரைப்பதற்காக மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் முதலைப் பண்ணை பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒகேனக்கல் பகுதிக்கு கொண்டுவரப்பட்ட விநாயகா் சிலைகள் காவிரி கரையோரப் பகுதியில் வைத்து சிறப்பு பூஜை செய்து கிரேன் இயந்திரத்தின் மூலம் ஆற்றின் கரையோரப் பகுதிகளில் கரைக்கப்பட்டன.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமை 330 சிலைகள் கரைக்கப்பட்டன. பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ்.மகேஸ்வரன் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
முதலைப் பண்ணைப் பகுதியில் சிலை கரைப்பதை கண்காணிக்கும் வகையில் பரிசல்கள் மூலம் கரையோரப் பகுதிகளில் சுமாா் 30க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.